கம்மம்: தெலங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி (BRS) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று பிஆர்எஸ் ஆத்மிய சம்மேளன் (BRS Atmiya Sammelan) கூட்டம் நடைபெற இருந்தது. கம்மம் மாவட்டத்தில் கரேபள்ளி மண்டலில் உள்ள சீமலபடு பகுதியில் நடைபெற இருந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மக்களவை உறுப்பினர் நாகேஸ்வர ராவ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராமுலு நாய்க் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
அப்போது அவர்களை வரவேற்பதற்காக அக்கட்சியைச் சார்ந்தவர்கள் பட்டாசு வெடித்துள்ளனர். இதில் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த குடிசை வீட்டில் பட்டாசு பொறி விழுந்துள்ளது. இதனால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பணியில் இருந்த காவல் துறையினர் மற்றும் உள்ளூர்வாசிகள், தண்ணீரைக் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தீ பற்றிய வீட்டினுள் இருந்த கேஸ் சிலிண்டரை யாரும் கவனிக்கவில்லை.
இதனிடையே பலத்த சத்தத்துடன் கேஸ் சிலிண்டர் வெடித்துள்ளது. இந்த விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இருவர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் உடனடியாக கம்மம் மருத்துவமனைக்கு காவல் துறையினரின் வாகனத்தில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.