சுர்குஜா (சத்தீஸ்கர்):2012ஆம் ஆண்டு நிர்பயா பாலியல் வன்புணர்வு சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது சத்தீஸ்கரில் நிகழ்ந்துள்ளது. சத்தீஸ்கரின் சுர்குஜாவில் நான்கு பேர் சேர்ந்து இளம்பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
அந்த பெண்ணையும், அவருடன் இருந்த நண்பரையும் கடுமையாக தாக்கி அங்கிருந்து தப்பித்துள்ளனர். இந்த சம்பவத்தில், குற்றமிழைத்த நால்வரையும் போலீசார் கைது செய்துள்ளனர். நான்கு பேரில் ஒருவர் சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இதுகுறித்து தகவல் அறிந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேக் சுக்லா, மகளிர் காவல் துறையினர் சம்பவ நடந்த சுர்குஜா வனப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது நண்பரும் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அருகிலுள்ள கிராமங்களில் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையின்போது, போலீசாரை கண்டு தப்பித்து ஓட முயன்ற இருவரை காவலர்கள் பிடித்துள்ளனர். பாதிக்கப்பட்ட அவர்களை அடையாளம் கண்ட நிலையில், குற்றவாளிகளை போலீசார் கைதுசெய்தனர். அவர்கள் மூலம் மற்ற இரண்டு குற்றாவளிகளை போலீசார் கைது செய்தனர். குறிப்பாக, புகார் அளித்த இரண்டு மணி நேரத்தில் போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரான போலா (அ) சந்தோஷ் யாதவ் போலீஸ் விசாரணையில், மே 20ஆம் தேதி இரவு 8 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளார். அந்த பெண் அவரது நண்பருடன் இருந்ததாகவும், அப்போது, தன்னுடன் இருந்த அபிஷேக் யாதவ், நாகேந்திர யாதவ் மற்றும் சிறுவன் ஆகியோர் சேர்ந்து அப்பெண்ணை மரத்தடிக்கு கொண்டு வந்து கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், பெண்ணின் நண்பரை அடித்துவிட்டு, அவர்களின் பையில் இருந்த பணத்தையும் திருடிச்சென்றதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 8 மணிநேர போராட்டம் - 300 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் உயிரிழப்பு