ஆர்எஸ்எஸ் முன்னாள் தலைவர் சாவர்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழா டெல்லி அம்பேத்கர் மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் சாவர்கர் குறித்து ராஜ்நாத் சிங் தெரிவித்த கருத்து தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், "சாவர்கர் குறித்து பல பொய்கள் பரப்பப்பட்டுவருகின்றன.
சாவர்கர் ஆங்கிலேய அரசிடம் கருணை மனு வைத்து மன்னிப்புக் கேட்டதாக தொடர்ந்து போலித் தகவல் சொல்லப்பட்டுவருகிறது. உண்மையில் தனது விடுதலைக்காக சாவர்கர் கருணை மனு தாக்கல் செய்யவில்லை. அண்ணல் காந்தி சாவர்கர் விடுதலைப் பெற வேண்டும் என ஆங்கிலேய அரசிடம் வலியுறுத்தினார்.
காந்தியின் விருப்பத்தின் காரணமாகவே சாவர்கர் கருணை மனுவை தாக்கல் செய்தார். விடுதலைப் போராட்ட இயக்கம் சுமூகமாக நடைபெற சாவர்கர் விடுதலை பெற வேண்டும் என்பது காந்தியின் விருப்பம்" என்றார்.
பூபேஷ் பாகல் எதிர்வினை
ராஜ்நாத் சிங்கின் இந்த கருத்தின் உண்மை தன்மை குறித்து பலரும் கேள்வியெழுப்பிவருகின்றனர். சிறையில் இருந்த சாவர்கரை காந்தி எப்படி தொடர்பு கொண்டிருக்க முடியும், சாவர்கர் ஆங்கிலேயர்களின் சார்பாகவே செயல்பட்டவர் என சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் விமர்சித்துள்ளார்.