ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருக்கும் முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று (அக்.21) காலை 8 மணிக்கு, ககன்யான் திட்டத்தின் டிவி-டி1 என்ற சோதனை விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய இருந்தது.
இவ்வாறு, இன்று காலை 8 மணிக்கு இந்த சோதனை விண்கலம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரேல் தெரிவித்த நிலையில், தாமதமாக 08.30 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்தது. இதனால் அரை மணிநேரம் சோதனை தாமதமான நிலையில், மீண்டும் கவுண்ட் டவுன் நிறுத்தப்படுவதாக இஸ்ரோ அறிவித்தது.
இதனையடுத்து 08.45 மணியளவில் விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கான கவுண்ட் டவுன் தயாரானது. இருப்பினும், கடைசி 5 விநாடி இருக்கும்போது, சோதனை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது. இதனையடுத்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “சில தொழில்நுட்ப காரணங்களால் தற்காலிகமாக ககன்யான் சோதனை விண்கலத்தின் சோதனை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை இஸ்ரோ குழு தீவிரமாக ஆராய்ந்து, அதனை களையும்.
இதனைத் தொடர்ந்து மிக விரைவில் ககன்யான் விண்கலத்தின் சோதனை வெற்றிகரமாக நடைபெறும். உங்களது ஆதரவுக்கு நன்றி” என தெரிவித்தார். இந்த சோதனையில், மனிதர்களை விண்ணுக்கு சுமந்து செல்ல இருந்த சோதனை விண்கலத்தின் (crew module) செயல்பாடு குறித்தும், பாதுகாப்பாக தரை இறங்குதல் குறித்தும் ஆய்வுகள் நடைபெற இருந்தது.
சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 திட்டங்களின் வெற்றிக்கு பிறகு இஸ்ரோ ககன்யான் திட்டத்தில் தீவிரமாக இறங்கி இருந்தது. இந்நிலையில் ககன்யான் திட்டத்திற்கான விண்கலன் ஏவப்படுவதற்கு முன்னர் தொழில்நுட்ப காரணங்களால் நிறுத்தப்பட்ட நிலையில், அதை சரிசெய்யும் பணி துரிதமாக நடைபெற்றது.
இந்நிலையில் ககன்யான் சோதனை விண்கலன் மீண்டும் 10 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்து இருந்தது. இந்நிலையில் ககன்யான் சோதனை விண்கலன் 10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பின்னர் திட்டமிடப்பட்டது போல், மனிதர்கள் அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட கலன், விண்கலனில் இருந்து பிரிந்தது.
பிரிந்த விண்கலன் சிறிது தூரத்திற்கு சென்ற பின்னர் அதிலிருந்த பாராசூட்கள் விரிந்து, கலன் திட்டமிட்டட்ட படி வங்காள விரிகுடாவில் விழுவதற்கான செயல்முறை தொடர்ந்து நடைபெற்றது. பின்னர் திட்டமிட்டபடி ககன்யான் திட்டத்தின் சோதனை கலன் வங்காள விரிகுடாவில் விழுந்தது.