ஆந்திரா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருக்கும் முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று (அக்.21) காலை 8 மணிக்கு, ககன்யான் திட்டத்தின் டிவி-டி1 என்ற சோதனை விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய இருந்தது.
இவ்வாறு, இன்று காலை 8 மணிக்கு இந்த சோதனை விண்கலம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரேல் தெரிவித்த நிலையில், தாமதமாக 08.30 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்தது. இதனால் அரை மணிநேரம் தாமதமாக சோதனை விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட இருந்த நிலையில், மீண்டும் கவுண்ட் டவுன் நிறுத்தப்படுவதாக இஸ்ரோ அறிவித்தது.
இதனையடுத்து 08.45 மணியளவில் விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கான கவுண்ட் டவுன் தயாரானது. இருப்பினும், கடைசி 5 விநாடி இருக்கும்போது, சோதனை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது. இதனையடுத்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “சில தொழில்நுட்ப காரணங்களால் தற்காலிகமாக ககன்யான் சோதனை விண்கலத்தின் சோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான காரணத்தை இஸ்ரோ குழு தீவிரமாக ஆராய்ந்து, அதனை களையும். இதனைத் தொடர்ந்து மிக விரைவில் ககன்யான் விண்கலத்தின் சோதனை வெற்றிகரமாக நடைபெறும். உங்களது ஆதரவுக்கு நன்றி” என தெரிவித்தார். இந்த சோதனையில், மனிதர்களை விண்ணுக்கு சுமந்து செல்ல இருந்த சோதனை விண்கலத்தின் (crew module) செயல்பாடு குறித்தும், பாதுகாப்பாக தரை இறங்குதல் குறித்தும் ஆய்வுகள் நடைபெறும்.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் (Gaganyaan) திட்டத்தின் மூலம், உலக நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம், நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோவால் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.
இதன் மூலம் நிலவில் தரையிறங்கிய நாடுகளில் 4வது இடத்தையும், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதில் முதல் இடத்தையும் பெற்று இந்தியா சாதனை படைத்தது. இந்த வெற்றிக்குப் பிறகு, சூரியனை ஆய்வு செய்ய கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இதன் தொடர்ச்சியாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், தற்போது விண்ணுக்கும், நிலவுக்கும் மனிதர்களை அனுப்பும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.
இவ்வாறு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தரையில் இருந்து 400 கிலோ மீட்டர் தூர சுற்று வட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பி, அவர்களை மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாகத் திரும்ப அழைத்து வர இஸ்ரோ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்தை 2025ஆம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. அதற்கு முன்னர் 3 கட்ட சோதனைகள் நடைபெறும். இந்த 3 கட்ட சோதனையில், இன்று முதல்கட்ட சோதனை நடைபெற இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் கனவுத் திட்டம்.. நாளை நடக்கவிருக்கும் சோதனைகள் குறித்த முழு விவரம்!