ராஞ்சி: இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள அமைப்பு ஜி20. இந்த அமைப்பின் உச்சி மாநாடு கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்றது. இம்மாநாட்டை நடப்பாண்டில் நடத்துவதற்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10-ம் தேதிகளில், ஜி20 மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது. அதே வேளையில், இதுதொடர்பாக 200 கூட்டங்களை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நாளை முதல் 2 நாட்கள், ஜி20 பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜி20 அமைப்பில் இடம்பெறாத நாடுகளின் துறை சார் வல்லுநர்களும் இக்கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ராஞ்சிக்கு வந்துள்ளனர்.