உதய்ப்பூர்: இந்தோனேசியாவில் டிசம்பர் 1ஆம் தேதி ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது. இந்த அமைப்பு அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா ஒன்றியம் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது. இந்த நாடுகளின் மக்கள்தொகை உலக மக்கள்தொகையின் மூன்றில் இரண்டு பங்காகும். உலக வர்த்தகத்தில் நான்கில் மூன்று பங்காகும்.
உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதம் உடையவையாகும். இத்தனை பெரிய நாடுகளின் வல்லமை வாய்ந்த குழுவிற்கு இந்தியா தலைமை தாங்குகிறது. இது நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, உலகளாவிய நன்மை மீது முழுகவனத்தையும் செலுத்த வேண்டும். ஜி20 பொறுப்புக்கு பின் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அதுதொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும். பல்வேறு நாடுகளிலிருந்து மக்கள் நமது நாட்டின் மாநிலங்களுக்கு வருவார்கள்.
நமது மாநிலத்தின் கலாச்சாரம், தனித்துவம், வரலாற்று சிறப்புகளை உலகின் பார்வைக்கு எடுத்துச்செல்லப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அந்த வகையில், இந்தியாவின் தலைமையின் கீழ் முதல் ஜி20 ஷெர்பா கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்று (டிசம்பர் 4) தொடங்கியது. இன்றிலிருந்து 4 நாள்களுக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் வங்கதேசம், எகிப்து, மொரிஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த உறுப்பினர்கள் தொழில்நுட்ப மாற்றம், பசுமை மற்றும் வாழ்க்கை மேம்பாடு, உணவு, எரிபொருள், உரங்கள் பகிர்வு மற்றும் உற்பத்தி, சுற்றுலா மற்றும் கலாச்சாரம், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து விவாதிப்பார்கள். இந்த 4 நாள்கள் கூட்டம் உலக பாரம்பரிய தளமான கும்பல்கர் கோட்டை, ரணக்பூர் கோயில் வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடக்கிறது. அப்போது கலாச்சார நிகழ்ச்சிகள், கலை கண்காட்சிகள் மற்றும் பயணங்கள் மூலம் உலக பிரதிநிதிகளுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழ் இலக்கிய கூற்றுகளை பிரதமர் மோடி பல மேடைகளில் மேற்கோள் காட்டிவருகிறார் - நிர்மலா சீதாராமன்