டெல்லி: இந்தியா தலைமை தாங்கிய ஜி20 மாநாடு, நேற்று (செப் 9) மற்றும் இன்று (செப் 10) டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெற்றது. இதில், இந்தியா உள்பட 20 நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும், இதில் ஆப்பிரிக்க யூனியன் தன்னை 21வது நாடாக இணைத்துக் கொண்டது. மேலும், இதில் காலநிலை மாற்றம் உள்ளிட்ட சில முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இந்த நிலையில், இன்றைய ஜி20 மாநாட்டின் ஒரு எதிர்காலம் (One Future) என்னும் தலைப்பின் கீழ் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல்வேறு உலக அமைப்புகளுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கிறேன். உலக அமைப்புகளில் இணையும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே நேரத்தில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்கள் அப்படியே உள்ளனர்.
உலகத்தின் புதிய சாத்தியக்கூறுகள் என்பது புதிய உலகளாவிய கட்டமைப்பை நிச்சயமாக பிரதிபலிக்கும். 51 உறுப்பினர்களோடு ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டபோது உலகம் வேறு மாதிரியாக இருந்தது. ஆனால், தற்போது உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 200-ஐத் தொட இருக்கிறது. பேரிடர்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளின்போது உலக அமைப்புகள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது.
இது இயற்கை விதி. சமூக கட்டளை, பணம், நிதி ஸ்திரத்தன்மை மற்றும் உலகளாவிய நிலைத்தன்மை ஆகியவற்றை நிலைநிறுத்துவதில் கிரிப்டோ கரன்சி புதிய பகுதியாக உள்ளது. உலக அமைப்புகளில் அதிகமான உள்ளார்ந்த மற்றும் பொறுப்புமிக்கவற்றை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்.
இந்தியா உள்பட ஜி4 நாடுகளான பிரேசில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகியவை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடங்களுக்கு ஒருவருக்கொருவர் ஆதரவு அளிக்கும். ஐநா சீர்திருத்த நிகழ்ச்சி நிரலின் இலக்குகள், ஐநா உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. மேலும், இயக்க சுதந்திரம், அதிக அதிகாரப் பரவலாக்கம், உயர் செயல்திறன் மற்றும் அதிகரித்த வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவையும் இந்த நிரலின் இலக்குகளில் அடங்கும்” என தெரிவித்தார்.
முன்னதாக, ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், காலநிலை மாற்றத்தை சரி செய்ய பசுமை காலநிலை நிதியாக (Green Climate Fund) 2 பில்லியன் வழங்குவதாக அறிவித்து உள்ளார். மேலும், ஜி20 மாநாடு நிறைவு பெற்ற நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட உலகத் தலைவர்கள் தங்களது தாயகத்தை நோக்கி புறப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க:G20 Summit: அமெரிக்க அதிபர் கான்வாயில் கவனக்குறைவு.. பாதை மாறியதால் பதற்றம்.. பாதுகாப்பை அதிகரித்த அதிகாரிகள்!