கவுஹாத்தி: இந்தியா கடந்த டிசம்பர் 1ஆம் தேதி, ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டது. அதைத் தொடர்ந்து ஓராண்டுக்கு நாடு முழுவதும் ஜி20 தொடர்பான மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டு, நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அசாமின் கவுஹாத்தி நகரில் ஜி20-யின் இரண்டு நாள் மாநாடு கடந்த 2,3 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் ஜி20 நாடுகளைச் சேர்ந்த 95 வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பிறகு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அசாமின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கும், சிறப்புமிக்க இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். அசாம் மாநில சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பிரம்மபுத்திரா நதியில் படகு பயணம் செய்தனர். அலங்கரிக்கப்பட்ட படகில் சாண்ட்பார் தீவுக்கு சென்றனர். அங்கு அவர்களுக்காக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கயான்-பயான், பிஹு உள்ளிட்ட பாரம்பரிய நடனமாடி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பழங்குடி மக்களின் நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகளையும், பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தனர். அதேபோல், நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரிய நடனமான "சத்திரியா" நடனத்தையும் ஜி20 பிரதிநிதிகள் பார்த்து மகிழ்ந்தனர்.
ஜி20 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அசாமின் பாரம்பரியமும், கலாசாரமும் செறிந்த இந்த நிகழ்ச்சிகள் மிகவும் பிடித்திருக்கும் என நம்புவதாக அம்மாநில சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பாஜக பிரமுகர் நக்சலைட்டுகளால் வெட்டிக் கொலை - குடும்பத்தினர் கண்முன்னே நடந்த கோரம்!