உதய்பூர்: இந்தியா ஜி20 தலைவர் பதவியை இந்தோனேசியாவிடமிருந்து டிச.1ல் ஏற்ற நிலையில், ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள சிட்டி பேலஸின் தர்பார் ஹாலில் இன்று முதல் 4 நாட்களுக்கான ஜி20 ஷெர்பா கூட்டம் நடைபெறுகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காலை 8.30 மணிக்குத் தொடங்கிய இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று, முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
ஜி20 ஷெர்பா கூட்டத்தில் அமிதாப் காந்த் தொடக்க உரையாற்றினார். இதைத் தொடர்ந்து நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் அஜய் பாய் சேத் விளக்கமளித்தார். தொழில்நுட்ப மாற்றம், பசுமை மேம்பாடு மற்றும் வாழ்க்கை, பெண்கள் தலைமையிலான மேம்பாட்டைக் கவனத்தில் கொள்ளுதல், SDG களை செயல்படுத்துவதை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட சில முக்கிய பிரச்சனைகளில், பிரதிநிதிகள் முக்கியமான உரையாடல்களை நடத்தவுள்ளனர்.
பிரதிநிதிகள் ஜாக் மந்திர் அரண்மனையில் இரவு உணவு சாப்பிடுவார்கள், அங்கு 'ராஜஸ்தானின் வண்ணங்கள்' என்ற கலாச்சார நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஷெர்பா கூட்டத்தின் 2-வது நாளான செவ்வாய்க்கிழமை, உதய்பூர் சிட்டி பேலஸின் மனக் சவுக்கில் இந்தியாவின் பல்வேறு கலை வடிவங்களைக் காட்சிப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.