இன்ஜினியரான முகமது ஜுபைர் Alt Newsஇன் இணை நிறுவனர்களில் ஒருவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், இணையத்தில் உலாவும் போலி தகவல்களை ஆதாரங்களுடன் தவறு என்று ஜூபைர் பகிர்ந்து வந்தார்.
ஒரு சில தருணங்களில் ஜூபைர் வெளியிட்ட பதிவுகளும் தவறானவை என விமர்சனம் எழுந்தது. கியான்வாபி மசூதி விவகாரத்தின் போது , ஜூபைர் வாடிகன் சிட்டியும் சிவலிங்கத்தின் வடிவத்தில் உள்ளது, வாதிகா தான் வாடிகனாக மாறியதா என சர்ச்சையாகப் பதிவிட்டு இருந்தார்.
மேலும் நூபுர் சர்மா முகமது நபிகள் குறித்துப் பேசியபோது, அவருக்கு எதிராகப் பல்வேறு தரப்பினர் கண்டன குரல்களை எழுப்பினர். அப்போது நூபுர் சர்மா தனது உயிருக்கு அச்சறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஜூபைர் சிலரைத் தூண்டிவிடுவதாக ட்வீட் செய்திருந்தார்.
இந்த நிலையில் ஜூபைர் கடந்த 2020ஆம் ஆண்டு பதிவு செய்த ட்வீட் தொடர்பாக வழக்கு ஒன்றின் விசாரணைக்காக வருமாறு டெல்லி காவல் துறையின் தனிப்பிரிவினர் அழைத்தனர். விசாரணைக்கு ஆஜரான அவரை மற்றொரு வழக்கில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜுபைர் மீது இந்திய தண்டனைச சட்டம் 153A (மதம், இனம் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் 295A (மத நம்பிக்கைகளை அவமதித்தல்) உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.