டெல்லி:மாநகராட்சி தேர்தலில் பாஜகவின் ரேகா குப்தாவை எதிர்த்து 34 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஷெல்லி ஓபராய்(shelly oberoi) டெல்லியின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியான ஷெல்லி ஓபராய்( மொத்தம் உள்ள 266 வாக்குகளில், 150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், அதே நேரத்தில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரேகா குப்தா 116 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.
39 வயதான ஷெல்லி ஓபராய் டெல்லியின் கிழக்கு படேல் நகர் வார்டில் முதல் முறையாக கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். பேராசிரியரான இவர் 2013 முதல் ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறார். ஆம் ஆத்மி கட்சியின் பல பிரச்சாரங்களில் பங்கேற்றார். அதன்பிறகு அவரது அரசியல் வாழ்க்கை உயரத் துவங்கியது. 2020 வாக்கில், அவர் டெல்லி ஆம் ஆத்மியின் மகளிர் பிரிவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
மேலும் இவர் 2022 டிசம்பரில் டெல்லி மாநகராட்சி (MCD) தேர்தலில் போட்டியிட்டார். ஷெல்லி ஓபராய் அவரை எதிர்த்து அந்த வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை எதிராக 269 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து ஜனவரி 6, 2023இல் மேயர் தேர்தலுக்கான மேயர் வேட்பாளராக ஆம் ஆத்மி ஷெல்லி ஓபராய் பெயரை பரிந்துரைத்தது.
ஷெல்லி ஓபராய் இந்திரா காந்தி நேஷனல் ஓபன் யுனிவர்சிட்டியின் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸில், தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார். இவர் ஆம் ஆத்மியில் சேர்ந்த அடுத்த வருடம், செப்டம்பர் 2014 இல் டெல்லி பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்டார். மேலும் இவர் கல்வியிலும் பல சாதனைகளை நிகழ்த்தி பல விருதுகளை பெற்றுள்ளார்.