சென்னை: நாட்டையே உலுக்கிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 6 பாதுகாப்பு படையினர், 2 நாடாளுமன்ற வளாக பாதுகாவலர்கள் மற்றும் தோட்டப் பணியாளர் என 9 பேர் மரணம் அடைந்தனர். இச்சம்பவம் நமது நாட்டின் நீங்கா நினைவுகளுள் ஒன்றாகத் திகழ்கிறது.
இச்சம்பவம் குறித்து அப்போதைய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி, "நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதல், பாகிஸ்தானை மையமாகக் கொண்டு, பாகிஸ்தானின் உதவியில் இயங்கும் லக்ஷர் ஏ தைய்யிபா, ஜாய்ஷ் ஏ முகம்மது அமைப்பைச் சார்ந்தவர்கள் என்பது தெளிவாகியுள்ளது" என்று மக்களவையில் பேசினார்.
அந்நாளில் நடந்தது என்ன?2001ஆம் ஆண்டு, டிசம்பர் 13ஆம் தேதி காலை சுமார் 11.30 மணி அளவில், நாடாளுமன்ற வளாகத்திற்குள் போலியான அடையாள அட்டைகளைக் காட்டி, வெள்ளை நிற அம்பாசிடர் காரில், 5 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல் பலத்த ஆயுதங்களுடன் நுழைந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த பயங்கரவாத தாக்குல் நடைபெற்ற தினத்தன்று, நாடாளுமன்ற கூட்டம் நிறைவுபெற்று சுமார் 40 நிமிடங்கள் கடந்திருந்தது. அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் எதிர்கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றிருந்த நிலையில், எல்.கே.அத்வானி உள்பட 100க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்தனர்.
அத்துமீறி உள்ளே நுழைந்த பயங்கரவாதிகளின் வாகனம், அப்போதைய துணை குடியரசுத் தலைவர் கிருஷ்ணன் காந்த்-இன் பாதுகாப்பு வாகனத்தில் மோதி முதல் தாக்குதல்களைத் துவங்கினர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளிடம் ஐந்து AK-47 ரக துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் இருந்தது தெரிய வந்துள்ளது. பின்னர் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற மோதலில் 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
அதனை அடுத்து, உள்ளே இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என அனைவரும் காயங்கள் இன்றி மீட்கப்பட்டனர். நாட்டில் நடந்த மற்ற பயங்கரவாத தாக்குதல்களை விட உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், நாடாளுமன்ற வளாகத்திலேயே நடைபெற்ற தாக்குதலால், நாட்டின் ஜனநாயகத்தை அதிர்வடையச் செய்ததாக மக்கள் கருத்து தெரிவித்தனர்.
அந்த தாக்குதல் சம்பவம், நாடாளுமன்ற வளாகத்தில் போதிய பாதுகாப்பு குறைவாக இருந்ததாகக் கருதிய அரசாங்கம், பாதுகாப்பு பணிகளை பலப்படுத்தியதோடு, தாக்குதல் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தது. விசாரணையில் அஃப்ஸல் குரு, எஸ்.ஏ.ஆர்.ஜீலானி, ஷௌகத் ஹுசைன், நவ்ஜோத் சந்து ஆகியோருக்கும், தாக்குதல் நடத்திய கும்பலுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.