மும்பை:பாலிவுட் நகரமான மும்பையில், தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்தவர், நடிகை துனிஷா ஷர்மா (21). இவரும் அதே சீரியலில் நடித்து வந்த ஷீசன் முகமது கானும் காதலித்து வந்ததாக அவ்வப்போது தகவல்கள் கசிந்து வந்தன. இந்த நிலையில் கடந்த டிச.24ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் நடைபெற்று வந்த சீரியல் படப்பிடிப்பு தளத்தில், துனிஷா ஷர்மா நடித்து வந்தார்.
படப்பிடிப்பு இடைவேளையின்போது கழிவறைக்குச் சென்ற துனிஷா, வெகு நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. எனவே இதுகுறித்து வாலிவ் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து படப்பிடிப்பு தளத்துக்கு வந்த காவல் துறையினர், கழிவறையின் கதவை உடைத்தனர். அப்போது துனிஷா தூக்கில் தொங்கிய நிலையிலிருந்துள்ளார்.
தொடர்ந்து துனிஷாவை மீட்ட காவல் துறையினர், இதுதொடர்பான விசாரணையைத் தொடங்கினர். இதனிடையே துனிஷாவின் தாயார், தற்கொலைக்குக் காரணம் நடிகர் ஷீசன் முகமது கான் என காவல் துறையில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் துனிஷாவின் காதலனான ஷீசனை காவல் துறையினர் விசாரித்தனர்.
இதனிடையே துனிஷா மற்றும் ஷீசன் ஆகிய இருவரது மொபைல் போன்களில், தற்கொலைக்கு முந்தைய 15 நாட்களுக்கான தகவல்களைக் காவல் துறையினர் மீட்டெடுக்கத் தொடங்கினர். இதனையடுத்து ஷீசனை மகாராஷ்டிராவின் வசாய் நீதிமன்றம் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டது.
எனவே இந்திய தண்டனைச் சட்டம் 306இன் கீழ் கைது செய்யப்பட்ட ஷீசனிடம், காவல் துறையினரின் விசாரணை முடுக்கி விடப்பட்டது. இந்த விசாரணையில், ஷீசன் - துனிஷா காதல் உறுதி செய்யப்பட்டது. அதேநேரம் ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கால் இருவரும் பிரிந்ததாகவும் ஷீசன் தெரிவித்துள்ளார்.
மேலும் காதல் முறிவால் மனமுடைந்த துனிஷா, இறப்பதற்கு முன்னரும் ஒரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்றும், அப்போது துனிஷாவை காப்பாறிய ஷீசன், அவரை கவனமாக பார்த்துக் கொள்ளும்படி அவரது தாயாரிடம் கூறியதாகவும் காவல் துறையினரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் துனிஷாவின் தாயார் அளித்துள்ள புகாரில், ஷீசன் தனது மகளை ஏமாற்றி அவருடன் பழகி வந்துள்ளார் என தெரிவித்துள்ளார். முதலில் திருமணம் செய்து கொள்வதாகத்தான் ஷீசன் துனிஷாவிடம் கூறி வந்துள்ளார். ஆனால், துனிஷாவுடன் காதல் உறவிலிருந்தபோதே, ஷீசன் பல பெண்களுடன் தொடர்பிலிருந்தார் எனவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு புகார்களும், தகவல்களும் மாறி மாறி துனிஷாவின் தற்கொலை வழக்கை சூழ்ந்து கொண்டிருக்க, திடீரென ஒரு வதந்தியும் புறப்பட்டது. அதாவது, துனிஷா கர்ப்பமாக இருந்தார் என தகவல்கள் கசிந்தன. ஆனால், நேற்று (டிச.26) வெளியான உடற்கூராய்வு அறிக்கையின்படி, துனிஷா கர்ப்பமாக இல்லை எனவும், அவர் தூக்குப் போட்டதில் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார் எனவும் தெரிய வந்தது.
இந்த நிலையில் இன்று (டிச.27) மாலை 3 மணியளவில் மும்பை மீரா சாலையில் துனிஷா ஷர்மாவின் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது. முன்னதாக துனிஷாவின் உடல் ஜேஜே மருத்துவமனையிலிருந்து, நேற்று இரவு பயந்தரில் உள்ள பண்டிட் பீம்சென் ஜோஷி மருத்துவமனையின் பிணவறைக்குக் கொண்டு வரப்பட்டது. அப்போது துனிஷாவின் தாயாருடைய உடல் நிலை மோசமாகியதாக அவரது தாய்மாமா தெரிவித்துள்ளார்.
இதனிடையே நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த மகாராஷ்டிரா ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரீஷ் மகாஜன், “துனிஷா ஷர்மா தற்கொலை ஒரு ‘லவ் ஜிகாத்’ விவகாரம். இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வர மாநில அரசு திட்டமிட்டுள்ளது” என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நடிகை துனிஷா தற்கொலை வழக்கிற்கும், ஷ்ரத்தா கொலை வழக்கிற்கும் என்ன தொடர்பு?