பானிபட்:ஹரியானா மாநில நீதிமன்றம் விவாகரத்து வழக்குகளிலே சற்று விசித்திரமான வழக்கை எதிர் கொண்டு உள்ளது. தனக்கு வந்த எச்ஐவி நோயை மனைவிக்கும் செலுத்த முயற்சிக்கும் கொடூர கணவன் குறித்த தகவல்கள் நீதிமன்றம் தரப்பில் வெளியாகி உள்ளன.
பானிபட் பகுதியைச் சேர்ந்த பெண், அம்பாலா நகர் பகுதியில் கல்லூரி படித்துக் கொண்டு இருந்த போது அதே பகுதியில் செல்போன் சர்வீஸ் சென்டரில் இளைஞர் மீது காதல் வயப்பட்டு உள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்த நிலையில், இளைஞர் சொந்தமாக உடற்பயிற்சி கூடத்தை திறந்து அதை நடத்தி வந்து உள்ளார். பெண்ணும் அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்து உள்ளார். இருவருக்கும் வாழ்க்கை நல்ல நிலையில் சென்று கொண்டு இருந்த நிலையில், இளைஞருக்கு அடிக்கடி உடல் நலக் கோளாறு ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் பெண்ணின் தலையில் இடி விழுந்தது போல், இளைஞருக்கு எச்ஐவி பாதிப்பு இருந்த செய்தி இடியாய் இறங்கியது. தனக்கு எச்ஐவி பாதிப்பு உறுதி செய்யப்பட்டதில் இருந்து இளைஞரின் நடத்தையில் பல்வேறு மாற்றங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
அடிக்கடி மனைவியுடன் சண்டையிடுதல், கட்டாயப்படுத்தி உடலுறவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளை பெண் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் உச்சமாக தனக்கு வந்த எச்ஐவி பாதிப்பை மனைவிக்கும் ஏற்படுத்துவேன் என கணவர் மிரட்டல் விடுததாக பெண் கூறி உள்ளார்.