டெல்லி:தலைநகர் டெல்லியில் மீண்டும் ஒரு கூட்டு பாலியல் வன்முறை சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு டெல்லியின் வசந்த குன்ஜ் பகுதியில் ஓடும் காரில் மூன்று பேர் தனது தோழியை கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.
குளிர் பானத்தில் மதுபானத்தை கலந்து அந்த பெண்ணை சுயநினைவு இழக்கச்செய்து, இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம், ஜூலை 6ஆம் தேதி நள்ளிரவு நிகழ்ந்துள்ளது.
தொடர்ந்து, அந்த பெண்ணின் வீட்டின் அருகே ஜூலை 7ஆம் தேதி அதிகாலையில் இறக்கிவிட்டுச் சென்ற அவர்கள், இதுகுறித்து போலீஸிடம் சென்றால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஆனால், அந்த பெண்ணின் தந்தை வசந்த விகார் காவல் நிலையத்தில் தொலைபேசி வாயிலாக புகார் அளித்தார். அப்போது,"எனது மகளை மூன்று நண்பர்கள் தங்களின் காரில் அழைத்து சென்று அவளை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்து எனது மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார்" என தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணும் வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து, வசந்த் விகார் காவல் துறையினர் மூன்று பேரை தீவிரமாக தேடி வந்தனர். அந்த பெண் கூறிய தகவலை வைத்து, கார் சென்ற அத்தனை பகுதிகளிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், அந்த மூன்று பேரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதையும் பாதிக்கப்பட்ட பெண் போலீசிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட மூன்று பேரையும் போலீசார் இன்று (ஜூலை 16) கைது செய்தனர். மேலும், குற்றச்செயலுக்கு பயன்படுத்திய அந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தற்போது, அவர்களிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:6 வயது சிறுவன் நாக்கு அறுக்கப்பட்டு கொடூர கொலை - போலீஸ் விசாரணை!