போபால்:மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் இறுதியில் மத்தியப்பிரதேச மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 2023 - 2024ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட், இன்று (மார்ச் 1) தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, அம்மாநில நிதியமைச்சர் ஜெகதீஷ் தேவ்டா இன்று மாநில சட்டப்பேரவையில் 3.14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதில் முக்கிய அம்சமாக ‘முக்கியமந்திரி லாட்லி பேனா யோஜனா’ என்ற திட்டத்திற்கு 8,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வருமான வரி செலுத்தாத பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ‘முக்கியமந்திரி பலிகா ஸ்கூட்டி யோஜனா’ என்ற திட்டத்தின் மூலம், 12ஆம் வகுப்பில் முதல் நிலை மதிப்பெண் எடுக்கும் பெண்களுக்கு இ-ஸ்கூட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 459 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ‘ஆதார் அனுதயா யோஜனா’ என்னும் திட்டத்தின் கீழ் பிற்படுத்த பழங்குடியினரான பைகா, ஃபரியா மற்றும் சஹாரியா போன்றவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதற்கு மாதம் 1,000 ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.