டெல்லி: சர்வதேச யோகா தினம் நாளை (ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், நாளை ஒரு நாள் சர்வதேச யோகா தினத்தையொட்டி, தாஜ்மஹால் உள்பட அனைத்து நினைவுச்சின்னங்களுக்கும் நுழைவுக்கட்டணம் இல்லாமல் சுற்றுலாப் பயணிகள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என இந்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
சர்வதேச யோகா தினத்தில் நினைவுச் சின்னங்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
இந்த உத்தரவு குறித்து ஆக்ரா பிரிவு தொல்லியல் கண்காணிப்பாளர் டாக்டர். ராஜ்குமார் படேல் கூறுகையில், "ஏப்ரல் 18ஆம் தேதி உலகப் பாரம்பரிய தினம், நவம்பர் 19ஆம் தேதி உலகப் பாரம்பரிய வாரத்தின் முதல் நாள் மற்றும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் ஆகிய நாட்கள் மட்டுமே நினைவுச்சின்னங்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் முதல்முறையாக சர்வதேச யோகா தினத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும், "நாளை ஃபதேபூர் சிக்ரியில் உள்ள பஞ்ச் மஹால் முன் யோகா நிகழ்ச்சி நடத்த பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒன்றிய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, மாநிலங்களவை எம்பி ஹர்த்வார் துபே, ஃபதேபூர் சிக்ரி மக்களவை எம்பி ராஜ்குமார் சாஹர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்" என்று கூறினார்.
இதையும் படிங்க: "சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்"