அராரியா (பிகார்): பிகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள ரனிகாஞ் பஜார் பகுதியில் விமல் குமார் யாதவ் என்ற பத்திரிகையாளர் வசித்து வந்தார். இந்த நிலையில், அவர் நேற்று (ஆகஸ்ட் 18) அவரது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உயிரிழந்த விமல் குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இந்த கொலை சம்பவத்தில் 8 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்து உள்ளது. இந்த நிலையில், கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக விபின் யாதவ், பாவேஷ் யாதவ், ஆஷிஷ் யாதவ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக அராரியா காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
அது மட்டுமல்லாமல், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் நான்கு பேரில் இரண்டு பேர் வெவ்வேறு வழக்குகளின் கீழ் அராரியா சிறையில் உள்ளனர். ரூபேஷ் யாதவ் மற்றும் கிராந்தி யாதவ் என அடையாளம் காணப்பட்டு உள்ள இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இரண்டு பேர் தலைமறைவாகி உள்ளனர்.
எனவே, தலைமறைவாக உள்ள இருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இது தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அராரியா மாவட்ட காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர். முன்னதாக நேற்றைய தினம், இந்த சம்பவம் தொடர்பாக பேசிய பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் இரங்கல் தெரிவித்தது மட்டுமல்லாமல், இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்றும் கூறினார்.
இந்த நிலையில், இன்று ஜேடியு செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் கூறுகையில், “சம்பவம் நிகழ்ந்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் காவல் துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டது என்பது முக்கியத்துவமானது. உயிரிழந்த குடும்பத்தினர் தெரிவித்த சந்தேக நபர்களின் பட்டியலை வைத்து சிறையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. எதிர்கட்சியினர் இதனைப் பற்றியும் பேசினால் நல்லது” என தெரிவித்தார்.
முன்னதாக, இந்த சம்பவம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், பிகார் மாநிலத்தில் பத்திரிகையாளர், காவல் துறையினருக்கு கூட பாதுகாப்பு இல்லை. ஏன், ஒரு பெண் எம்எல்ஏ கூட பாதுகாப்பாக உணரவில்லை. நிதீஷ் குமார் பிரதமராக டெல்லிக்குச் சென்று பேசுவதற்கு முன்பு, அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிரதமர் பதவிக்கு போட்டியிடலாம். ஏனென்றால், சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது” என தெரிவித்து இருந்தார். அதேபோல், பிகாரில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக மத்திய அமைச்சர் அஷ்வினி குமாரும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:டிஜிட்டல் இந்தியா திட்டமே, டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான முதல்படி - ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி!