மேற்கு வங்காள முன்னாள் ஆளுநர் கேசரிநாத் திரிபாதிக்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் வீட்டில் தன்மைப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று (ஜன.01) அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதன், காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் நேற்று (ஜன.01) 871 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஆயிரத்து 263 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, அங்கு மொத்தம் 13 ஆயிரத்து 823 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கரோனா தடுப்பூசியின் சோதனைக்கான ஏற்பாடுகள் உத்தரப் பிரதேசத்தில் தொடங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று (ஜன.02) சனிக்கிழமை, லக்னோவில் உள்ள ஆறு மருத்துவமனைகளில் தடுப்பூசி சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. ஜனவரி 5ஆம் தேதி முதல், உத்தரப் பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஐந்து இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
இது குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் தேவேந்திர நேகி கூறுகையில், “இங்கிலாந்திலிருந்து திரும்பியவர்களுக்கு, கரோனா உறுதிசெய்யப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் 28 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கு வீட்டு தனிமை வசதி வழங்கப்படாது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சட்டப்பேரவையைக் கூட்டுமாறு ஆளுநருக்கு கேரள அரசு பரிந்துரை!