டெல்லி : பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சராக கேப்டன் அமரீந்தர் சிங் இருந்தார். இவர் சில வாரங்களுக்கு கட்சி மேலிடம் கொடுத்த நெருக்கடி காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், கேப்டன் அமரீந்தர் சிங் பாஜகவில் இணைய போவதாக ஊகங்கள் வெளியாகின. இதை கேப்டன் அமரீந்தர் சிங் மறுத்தார். தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க போவதாக தெரிவித்தார்.
இதற்கிடையில் கேப்டன் அமரீந்தர் சிங் டெல்லி சென்றார். அங்கு அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசுவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் கேப்டன் அமரீந்தர் சிங் புதன்கிழமை (செப்.29) மாலை உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டுக்கு சென்றார்.
அங்கு அவர் அமித் ஷாவுடன் உரையாடினார். இது பஞ்சாப் மாநில அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் அமரீந்தர் சிங்குக்கும், கட்சியில் புதிதாக இணைந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வந்தது. இந்நிலையில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு கட்சி தலைவர் பொறுப்பை வழங்கியது. இது அமரீந்தர் சிங்குக்கு பெரும் அதிருப்தியை கொடுத்தது.