புதுச்சேரியில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, "காங்கிரஸ் கட்சித் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது பெருமை.
அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். சோனியா காந்தி, ராகுல் காந்தியின் ஆலோசனையின்படி செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. பொதுமக்களிடம் குறைகேட்க அதிகாரம் உள்ளது. முன்னாள் முதலமைச்சருக்கு ஆளுநர் என்றால் அலர்ஜி என்று தமிழிசை கூறியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் மேல்முறையீட்டுத் தீர்ப்பை ஆளுநருக்கு நான் அனுப்பியுள்ளேன்.
அதில் ஆளுநருக்குத் தனிப்பட்ட அதிகாரம் இல்லை என்று தெளிவாக உள்ளது. அதை அவர் படித்துப் பார்க்கட்டும். நான் அவருக்குச் சவால் விடுகிறேன். தெலங்கானாவில் மாதத்தில் இரண்டுமுறை மக்களின் குறைகளைக் கேட்பேன் என தமிழிசை சவுந்தரராஜன் கூற முடியுமா?.
அவ்வாறு செய்தால் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் ஆளுநருக்கு எதிராகப் போராட்டம் நடத்துவார்கள். நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் கூறாமல், நான் அவரது மக்கள் பணியைத் தடுத்து நிறுத்துவதாகக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
தெலங்கானாவில் முழுநேர ஆளுநராக உள்ள அவர் ஏன் அங்கு செல்லாமல் புதுச்சேரியிலேயே உள்ளார். அவரை அரசு விழாக்களில் அம்மாநில அரசு அழைப்பதில்லை. ஆளுநர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் பாஜக ஆளுநர்கள் மூலம் தொல்லை கொடுக்கும் நாடகம் நடத்தி வருகின்றனர். இங்குள்ள ஆட்சியாளர்கள் அதிகாரத்தைப் பறிகொடுத்து வருகின்றனர். மக்களுக்கு பணிபுரியும் ஆட்சியாகத் தெரியவில்லை.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டுள்ளது. அதே புதுச்சேரியில் ஏன் தடை செய்யவில்லை. அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். புதுச்சேரியில் கலாச்சாரத்தையும், போதை வஸ்துகளால் பெண்களைச் சீரழிக்கும் பப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். புதுச்சேரியில் கலாச்சார சீரழிவைத் தடுத்து நிறுத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:'தமிழ்நாட்டில் மூக்கையும் தலையையும் நுழைப்பேன், காலையும் வைப்பேன்' - தெலங்கானா ஆளுநர் தமிழிசை