டெல்லி: ‘அம்பேத்கரும் மோடியும்: சீர்திருத்தவாதியின் சிந்தனைகளும் செயற்பாட்டாளரின் அமலாக்கமும்’ என்ற நூலினை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே ஜி பாலகிருஷ்ணன், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல் முருகன், ப்ளூகிராஃப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் இயக்குநர் ஹித்தேஷ் ஜெயின் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று (செப் 16) வெளியிட்டார்.
அப்போது உரையாற்றிய அனுராக் தாக்கூர், இந்த நூல் மாபெரும் சீர்திருத்தவாதியான பாபா சாஹேப் பீம்ராவ் அம்பேத்கரின் சிறந்த சிந்தனைகள், கண்ணோட்டங்களின் தொகுப்பு மட்டுமல்ல. இவற்றை கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி எவ்வாறு செயல்படுத்தினார் என்பதற்கான தொகுப்பாகவும் உள்ளது. அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட மாபெரும் முயற்சிகளில் ஆவணமாக உள்ளது.
நாட்டின் முதலாவது சட்டத்துறை அமைச்சரான அம்பேத்கர், பாகுபாடு இல்லாத சமூகத்தை, நலிந்தவர்களை மைய நீரோட்டத்திற்கு கொண்டுவருவதை வளர்ச்சியின் பயன்கள் சமமாக அனைவருக்கும் வழங்கப்படுவதை தமது பார்வையாக கொண்டிருந்தார். ஆனால், சுதந்திரத்திற்கு பிந்தைய அரசுகளின் முயற்சிகள், இந்த சிந்தனைகளை நிறைவேற்ற தவறிவிட்டன. 2014ஆம் ஆண்டுக்கு பிறகான அரசு இந்த நோக்கங்களை உறுதியாக பின்பற்றி வருகிறது என்று தெரிவித்தார்