ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடைபெற்ற சம்பவம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில முன்னாள் அமைச்சர் ராஜேந்திர குதா, முதலமைச்சர் அசோக் கெலாட்டின் நிதிமுறைகேடு தொடர்பான ஆதரங்கள் தன்னிடம் இருப்பதாக கூறி சிவப்பு நிற டைரியை பேரவைக்கு எடுத்துச் சென்று அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது குறித்து பேரவைக்கு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர குதா, காங்கிரஸ் தலைவர்கள் தன்னை பேரவைக்குள் அனுமதிக்காமல் வெளியே இழுத்து தள்ளியதாக கண்ணீர் மல்க பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் அதன் மூலம் ராஜேந்திர குதா கூறியது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும், தன் கையில் இருக்கும் டைரியில் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் நிதிமுறைகேடு தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் தன்னை அடித்து, உதைத்து டைரியை பறித்ததாக குற்றம் சாட்டியுள்ள அவர், வருமான வரித்துறை சோதனையின் போது முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் காங்கிரஸ் தலைவர் தர்மேந்திர ரத்தோரின் வீட்டில் இருந்து டைரியை பத்திரப்படுத்தியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், இன்று தன்னை சுமார் 50 பேர் சேர்ந்து தாக்கிய நிலையில், ராஜஸ்தான் சட்டப்பேரவை தலைவர் தன்னை பேசக் கூட அனுமதிக்கவில்லை எனவும் தான் பாஜகவில் இருப்பதாக அவர்கள் தன் மீது குற்றம் சாட்டுவதாகவும் ராஜேந்திர குதா தெரிவித்துள்ளார். மேலும் தன் மீதான தவறு என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்புவதாகவும் அவர் கேட்டுக்கொண்டார்.