பெங்களூரு: பெங்களூரு முன்னாள் மேயரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ஆர். சம்பத் ராஜ்க்கு கர்நாடக உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (பிப்.12) நீதிமன்ற பிணை வழங்கியது.
முகநூலில் அரசியல் பிரமுகர் ஒருவர் தெரிவித்த கருத்து பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் பெங்களூருவில் கடந்தாண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி வன்முறை நிகழ்ந்தது. அப்போது, புலிகேசி நகர் எம்எல்ஏ அகண்ட ஸ்ரீநிவாச மூர்த்தியின் வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர்.
மேலும் டிஜே ஹள்ளி மற்றும் கேஜி ஹள்ளி காவல் நிலையங்கள் மீது கலவரக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர். இது தொடர்பாக மத்திய குற்ற பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் 300 பேர் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மேயர் ஆர். சம்பத் ராஜ், அப்துல் ஜாஹீர் உள்ளிட்டோர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் கைதான ஆர். சம்பத் ராஜ் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு எதிராக நவம்பரில் கர்நாடக உயர் நீதிமன்றம் பிணையில் வெளியேவர முடியாதபடி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் தற்போது உயர் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கோவிட் பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்ட ஆர். சம்பத் ராஜ் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: வன்முறையில் முடிந்த பேஸ்புக் பதிவு; பெங்களூருவில் ஊரடங்கு அமல்! துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு!