கொச்சி: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல திரைப்பட நடிகருமான இன்னசென்ட்(Innocent) தனது 75-வது வயதில் காலமானார். இன்னசென்ட் வீரத் தெகெதலா தொண்டை புற்று நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார். இந்நிலையில் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்படவே, பரிசோதனையில் அவருக்கு மீண்டும் புற்றுநோய் இருப்பது உறுதியானது. இந்நிலையில் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்ச பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
இன்னசென்ட் பிப்ரவரி 28, 1948 அன்று திருச்சூரில் உள்ள இரிஞ்சாலக்குடாவில் வாரித் தெகெதலாவின் மகனாகப் பிறந்தார். இன்னசென்டின் பெற்றோருக்கு 8 குழந்தைகள். அதில் ஐந்தாவதாக பிறந்த இன்னசென்ட், அவர்களுக்கு மூன்றாவது மகன் ஆவார். பல ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த இன்னசென்ட் புற்றுநோய்க்கு எதிரான தனது போராட்டத்தில் அனைவருக்கும் முன்மாதிரியாகவும் உத்வேகமாகவும் இருந்தார்.
ஏழ்மை நிறைந்த பின்னணியில் வளர்ந்து மலையாள சினிமாவையே வசப்படுத்திய இன்னசென்ட், மலையாள சினிமா நடிகர்களின் அமைப்பான அம்மா(AMMA) -வின் தலைவராக கேரளாவில் முக்கியமான ஆளுமையாக மாறினார். எந்த நேரத்திலும் நகைச்சுவையை அசாதாரணமான முறையில் கையாளும் இன்னசென்ட்டின் திறமையை மலையாள சினிமா உலகம் பல ஆண்டுகளாக அனுபவித்து வருகிறது.
இவர் தமிழில் லேசா லேசா உள்ளிட்ட படங்களில் குணாச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். மலையாளம், தமிழ், இந்தி மொழிகளில் சுமார் 750 படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இன்னசென்ட்டின் திறமைக்கு மாநில அரசு மூன்று விருதுகளும் வழங்கி கௌரவித்துள்ளது. 2021- சிறந்த நையாண்டிப் படைப்பான 'இரிஞ்சலக்குடகு சுட்டும்' நாவலுக்கு கேரள சாகித்ய அகாடமி விருதும் இன்னசென்ட்டுக்கு கிடைத்தது.