பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இவை தவிர ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளும் களமிறங்குகிறது. கர்நாடகாவில் ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர காங்கிரஸ் கட்சியுன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் தேர்தல் களம் சற்று சூடுபிடித்துள்ளது. இரு கட்சிகளும் ஒரு சில இடங்களை தவிர பிற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சனிக்கிழமை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக பெரும்பாலானோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. அதில் குறிப்பிடத்தக்கவர் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் . இதனால் அதிருப்தியில் இருந்த ஜெகதீஷ் ஷெட்டர் ஞாயிற்றுக்கிழமை பாஜகவில் இருந்து விலகினார்.
ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் வரவேற்போம் என முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கூறியிருந்த நிலையில், ஹுப்ளியில் தனது ஆதரவாளர்களுடன் ஜெகதீஷ் ஷெட்டர் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் விமானம் மூலம் பெங்களூரு வந்தடைந்த அவர் காங்கிரஸ் மூத்த தலைவர்களான சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணையும் முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது.