டெல்லி: ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாக அவரது மகள் சுபாஷினி சரத் யாதவ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
1999 முதல் 2004 வரை மறைந்த பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் விமானப் போக்குவரத்து மற்றும் உணவு, பொதுவிநியோகத் திட்டங்கள் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த சரத் யாதவ், 2017-ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதோடு, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கமும் செய்யப்பட்டார்.
பின்னர், ஐக்கிய ஜனதா தளம் கட்சி மீது உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டபோது அவரது கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. இதனால்,லோக் தந்திரிக் ஜனதா தளம்(Loktantrik Janata Dal) என்ற கட்சியை துவக்கினார். ஆனால் சிறிது காலத்தில் மனம் மாறிய சரத் யாதவ் முந்தைய ஜனதா தளத்தின் பல்வேறு கிளைகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் எல்ஜேடியை ஆர்ஜேடி எனப்படும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைப்பதாக அறிவித்தார். இப்படி நாடாளுமன்ற தேர்தலை நோக்கி தீவிரமாக செயல்பட்டு வந்த சரத் யாதவுக்கு வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர், கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.