இந்தூர் (மத்தியப்பிரதேசம்):விண்வெளி விஞ்ஞானியும், இஸ்ரோவின் முன்னாள் தலைவருமான கே.சிவன், இந்தூர் இந்திய தொழில்நுட்ப நிறுவன ஆளுநர் குழுவின் தலைவராக மூன்றாண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அந்நிறுவனம் இன்று (ஆகஸ்ட் 31) அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு விண்வெளி அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பை அறிமுகப்படுத்திய இந்தூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT), வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதியுடன் ஓய்வுபெறும் பேராசிரியர் தீபக் பி பாதக்கிற்கு பதிலாக சிவனை நியமிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), அதன் சந்திர ஆய்வுப் பணியான சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் கால் பதித்தது. இந்த வெற்றி இந்தியாவை ஒரு உயர்ந்த நாடாக மாற்றியுள்ளது. மேலும், இந்த வெற்றியால் தென் துருவத்திற்கு அருகில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது.
ஐஐடி இந்தூர் இயக்குநர் பேராசிரியர் சுஹாஸ் ஜோஷி கூறுகையில், “சிவனை ஆளுநர் குழுவின் தலைவராக கொண்டிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சந்திரயான்-3 வெற்றிகரமாக ஏவப்பட்டு, விண்ணில் கால் பதித்து, இந்தியா ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய நிலையில், சிவனை ஐஐடி இந்தூர் குடும்பத்தில் சேர்த்துக்கொள்ள இதைவிட சிறந்த நேரம் இருந்திட முடியாது.
இது குறித்து பேராசிரியர் ஜோஷி கூறுகையில், “ஐஐடி இந்தூர், விண்வெளி அறிவியல் மற்றும் பொறியியலில் பிடெக் உள்பட 10 புதிய கல்வித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டிலேயே இந்த பாடத்திட்டத்தை வழங்கும் முதல் ஐஐடி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தில் 4 மாணவிகள் உள்பட 20 பேர் உள்ளனர்” என கூறினார்.
மேலும், “சிவனின் வழிகாட்டுதலின் கீழ், ஐஐடி இந்தூர் விண்வெளிப் பொறியியலில் பயன்படுத்தப்படாத பகுதிகளில் பணியாற்றுவதன் மூலம் நாட்டின் விண்வெளிப் பணிக்கு பங்களிக்கும் வாய்ப்பைப் பெறும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
இதையும் படிங்க:பிரதமரைச் சந்தித்தார் பிரக்ஞானந்தா.. கிராண்ட் மாஸ்டரின் நெகிழ்ச்சி பதிவு!