மும்பை:மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட கார் நிறுத்தப்பட்டது தொடர்பாக காவல்துறை அதிகாரி சச்சின்வாசி கைது செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து மும்பை மாநகர காவல் ஆணையராக இருந்த பரம்வீர் சிங் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அப்போது முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதிய பரம்வீர் சிங், உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் பார்கள், விடுதிகள் மூலம் ஒரு மாதத்திற்கு 100 கோடி ரூபாய் வசூலிக்குமாறு சச்சின் வாசியை கேட்டுக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.
இதன்பிறகு அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஒன்றிய புலனாய்வுப் பிரிவு வழக்குப்பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இச்சூழலில் மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள அனில் தேஷ்முக் வீடுகளில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது பண மோசடி வழக்கை விசாரிக்கும் அமலாக்கதுறை, அவரது உதிவியாளர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றது.