புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று (மே11) செய்தியாளர்களுக்கு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது, " புதுச்சேரியில் நாளுக்குநாள் பரவிவரும் கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் பொது மக்கள் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த வருடம் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பாதிப்பு, உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
'கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நோய் தொற்று அதிகரிக்கும்' - புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி
கரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நோய் தொற்று மேலும் அதிகரிக்கும் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தற்போது பரவி வரும் நோய்த்தொற்றை குறைக்கும் வகையிலும், சிகிச்சை அளிக்கும் வகையிலும் ஐசியூ வார்டு, வெண்டிலட்டர், மருத்துவ உபகரணங்கள் அதிக அளவு இல்லை. தடுப்பூசி மட்டுமே நோயை விரட்ட முடியும். ஆகவே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிக அளவு தடுப்பூசி செலுத்த வேண்டும்.
தொடர்ந்து அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மத்திய அரசு நிர்வாகம் பொய்த்துவிட்டது. மாநிலங்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில்லை, மருத்துவ உபகரணங்கள் இல்லை, தேவையான வெண்டிலேட்டர் இல்லை. இதனால் மோடி அரசு கரோனா ஒழிப்பு தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை கடுமையாக அமல்படுத்தினால் மட்டுமே நோய்த்தொற்றை குறைக்க முடியும்" என்று நாராயணசாமி தெரிவித்தார்.