தர்ன் தரன்: பஞ்சாப் மாநிலம், தர்ன் தரன் பகுதியைச் சேர்ந்தவர், மேஜர் சிங் தாலிவால். காங்கிரஸ் மார்க்கெட் கமிட்டியின் முன்னாள் தலைவர். இந்நிலையில் இன்று (பிப்.27) வழக்கம் போல், சங்வா கிராமத்தில் தனக்கு சொந்தமான திருமண மண்டபத்துக்கு அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பெண்ணுக்கும், தாலிவாலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பெண், தாலிவாலை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினார். இதில் இரண்டு குண்டுகள் உடலில் பாய்ந்த நிலையில், தாலிவால் மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தியதுடன், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில், தாலிவாலை கொலை செய்தது அவரது உறவினர் என்றும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் அவரை கொன்றதும் தெரியவந்துள்ளது.
அந்தப் பெண்ணை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஆண்டு பஞ்சாப் மாநிலம் மானசாவில், காரில் சென்று கொண்டிருந்த பாடகர் சித்து மூஸ்வாலா, கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். தற்போது காங்கிரஸ் நிர்வாகி கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவர் ப்ரீத்திக்கு கண்ணீருடன் பிரியாவிடை... அவரது சொந்த ஊரில் நடந்த இறுதிச்சடங்கு!