அசாம் மாநிலத்தின் முதுபெரும் அரசியல் தலைவரும், அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான தருண் கோகாயின் உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில், இன்று (நவ.23) அவர் காலமானார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தொடர்ந்து குணமடைந்து வீடு திரும்பினார். அவரது வீட்டிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்ததை நிலையில், மருத்துவமனையில் அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
முன்னதாக, அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் ஜிஎம்சிஎச் மருத்துவமனை அலுவலர்களைத் தொடர்பு கொண்டு, கோகாயின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
2001ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை மூன்று முறை அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக தருண் கோகாய் பதவி வகித்துள்ளார்.
பின்னர் 1985-1990ஆம் ஆண்டு வரை பிரதமர் ராஜீவ் காந்தியின்கீழ் அகில இந்தியக் காங்கிரஸ் (ஏ) குழுவின் பொதுச் செயலாளராக தருண் கோகாய் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991-1996ஆம் ஆண்டு வரை அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அரசின்கீழ், மாநில உணவுத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் உள்ள டைட்டாபார் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து தொடர்ச்சியாக ஐந்து முறை தருண் கோகாய் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன் அதே தொகுதியிலிருந்து ஆறு முறை மக்களவை உறுப்பினராக தருண் கோகாய் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.