டெல்லி: காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் தென் மாநிலங்களில் உள்ள தலைவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் கிரண் குமார் ரெட்டி. இவர் ஒருங்கிணைந்த ஆந்திரா (ஆந்திரா, தெலங்கானா) மாநிலத்தில் 2010 முதல் 2014 வரை முதலமைச்சராக பதவி வகித்தவர். தெலங்கானா மாநிலம் தனியாக பிரிப்பதற்கு முன்பு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பெரும் பாடுபட்டுள்ளார்.
ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டு தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி பெரிதாக வெற்றியை பதிவு செய்யவில்லை. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, தெலங்கானாவில் சந்திரசேகரராவ் ஆகியோரின் செல்வாக்கே மேலோங்கி காணப்பட்டது. இதற்கிடையே ஆந்திராவில் YSR காங்கிரஸ் கட்சி அசுரபலமடைந்து ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை பிடித்தார்.
காங்கிரஸ் கட்சியில் முக்கியத்துவமின்மை காரணமாக அதிருப்தியில் இருந்த கிரண்குமார் காங்கிரஸ் கட்சியில் இருந்து 2014-ல் விலகினார். பின்னர் ஜெய் சமிக்யந்திரா என்ற சொந்த கட்சி தொடங்கினார். ஆனால் திடீரென 2018-ஆம் ஆண்டு டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து தன்னை மறுபடியும் கட்சியில் இணைத்துக்கொண்டார். பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆந்திர அரசியலில் பணியை செய்யவில்லை என்றாலும் அமைதியாக கட்சியில் இருந்த கிரண் குமார் ரெட்டி திடீரென கடந்த மாதம் 12-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கூறி தனது ராஜினாமா கடிதத்தை டெல்லி தலைமைக்கு அனுப்பியிருந்தார். அப்போது அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.