தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

V Maitreyan: மீண்டும் பாஜகவில் ஐக்கியமான அதிமுக மாஜி எம்.பி மைத்ரேயன்! - சிடி ரவி

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி முன்னிலையில் தன்னை இன்று பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 9, 2023, 2:17 PM IST

Updated : Jun 9, 2023, 3:34 PM IST

சென்னை:அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி முன்னிலையில் தன்னை இன்று மீண்டும் தாய் கழகமான பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையே அதிகாரப்போட்டி மோதல் ஏற்பட்ட சமயத்தில் முன்னாள் எம்.பி.மைத்ரேயன் ஆரம்பத்தில் ஓபிஎஸ் அணியில் பயணம் செய்தார். ஓபிஎஸ் அணி ஆதரவாளர்களை ஈபிஎஸ் அணியினர் நீக்கம் செய்வது, ஈபிஎஸ் அணி ஆதரவாளர்களை ஓபிஎஸ் அணியினர் நீக்கம் செய்வது என நீக்கம் செய்யும் படலம் தொடர்ந்து நீடித்து வந்தது.

அப்போது திடீரென ஈபிஎஸ் அணிக்கு தாவினார் மைத்ரேயன். சிறிது நாட்கள் ஈபிஎஸ் அணியில் பயணம் செய்த அவர், போதிய முக்கியத்துவம் இல்லாத காரணத்தால் மீண்டும் ஓபிஎஸ்ஸை சந்தித்து அவரது அணியில் ஐக்கியம் ஆனார். கடந்த ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி அதிமுகவில் இருந்து ஈபிஎஸ் தரப்பினரால் மைத்ரேயன் நீக்கம் செய்யப்பட்டார். பின்னர், சில மாதங்கள் நடப்பதை எல்லாம் அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த அவர், இன்று திடீரென டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டுள்ளார்.

1991ஆம் ஆண்டு பாஜகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய மைத்ரேயன், அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர், பொதுச்செயலாளர், துணை தலைவர், மாநில தலைவர் போன்ற பதவிகளை வகித்தார். பின்னர் 2000ஆம் ஆண்டில் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அப்போது இருந்து கட்சியின் முக்கிய பொறுப்புகளையும், மாநிலங்களவை உறுப்பினராகவும் மைத்ரேயன் தொடர்து செயல்பட்டு வந்தார்.

டெல்லியில் நடைபெறக்கூடிய அரசியல் நிகழ்வுகளை அதிமுக சார்பாக கவனித்து வந்தார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் அணியில் பயணம் செய்தார். அதன் தொடர்ச்சியாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்த போது மைத்ரேயனுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என பேசப்பட்டது.

ஜெயலலிதா இருந்த காலத்தில் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினரான மைத்ரேயனுக்கு அவரது மறைவிற்கு பிறகு எம்.பி. பதவி மறுக்கப்பட்டது. இதனால் ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரண்டு பேர் மீதும் மைத்ரேயன் அதிருப்தியில் இருந்தார். அப்போதுதான் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் இரு அணிகளிலும் மாறி மாறி பயணித்த மைத்ரேயன் தற்போது மீண்டும் பாஜகவில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார்.

அதிமுகவின் டெல்லி முகமாக ஜெயலலிதா காலத்தில் அறியப்பட்ட மைத்ரேயன் மீண்டும் தனது தாய் கட்சியான பாஜகவில் இணைந்த பிறகு திரைமறைவில் அதிமுகவில் அதிருப்தியில் உள்ள சிலர் நிர்வாகிகளை பாஜகவின் பக்கம் இழுக்க முயற்சிகளை செய்வார் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:125 கிடாக்களுடன் 10 கி.மீ நடந்து சென்ற மக்கள்.. எதற்காக தெரியுமா?

Last Updated : Jun 9, 2023, 3:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details