கோழிகோடு :கேரளாவில் பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோலை வைத்து தைத்த சம்பவத்தில் ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு பின் போலீசார் அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர்.
கேரள மாநிலம் கோழிகோடு மாவட்டம் மலயில் குழங்கரா பகுதியைச் சேர்ந்தவர் ஹர்சினா. கடந்த 2017ஆம் ஆண்டு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் ஹர்சினாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது ஹர்சினாவின் வயிற்றில் மருத்துவர்கள் தவறுதலாக இரண்டு கத்திரிகோலை வைத்து தைத்ததாக கூறப்படுகிறது.
சில மாதங்கள் கழித்து ஹர்சினாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட வயிற்று பகுதியில் வலி ஏற்பட்டு உள்ளது. நாளுக்கு நாள் வயிற்று வலி அதிகரித்த நிலையில், ஹர்சின பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடைசியாக மருத்துவர் ஒருவரை அணுகிய போது, அவர் ஹர்சினாவுக்கு சிடி ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்து உள்ளார்.
ஸ்கேன் செய்து பார்த்த போது அதிர்ச்சியாக ஹர்சினாவின் வயிற்றில் இரண்டு கத்திரிக்கோல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கோழிகோடு அரசு மருத்துவமனையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஹர்சினா அனுமதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றில் இருந்த 12 செ.மீ நீளம் மற்றும் 6 செ.மீ அகலம் கொண்ட இரண்டு கத்திரிகோல்கள் அகற்றப்பட்டன.
இதுகுறித்து ஹர்சினா அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த போலீசார் இரண்டு மருத்துவர்கள் மற்றும் இரண்டு செவிலியர்கள் குறித்து குற்றம்சாட்டி உள்ளனர். மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் மற்றும் கேரள மருத்துவ வாரியத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஆகஸ்ட் முதல் வாரம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பாக இரு விசாரணைக் குழுக்கள் விசாரணை நடத்திய நிலையில், ஹர்சினாவில் வயிற்றில் இருந்து கைப்பற்றப்பட்ட கத்திரிக்கோல்கள் மருத்துவக் கல்லூரிக்குச் சொந்தமானதா என்பதை ஆய்வு செய்தனர்.
அதேநேரம் மருத்துவக் கல்லூரியின் கருவி பதிவேட்டில் கத்திரிக்கோல்கள் காணாமல் போனதாக எந்த பதிவும் இல்லை என தெரிவித்த அதிகாரிகள், மருத்துவ அலட்சியமாக கருத முடியாது என முன்னர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஹர்சினாவுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்தது.
இதையும் படிங்க :வாயில் பல்லி நுழைந்ததால் சிறுவன் உயிரிழப்பா? சத்தீஸ்கரில் மர்மம்!