நியூ டில்லி: முகக்கவசம் அணிதல், கைக்கழுவுதல், சமூக இடைவெளி பேணுதல், திருமணம் மற்றும் பெரிய கூட்டங்கூடும் பெரும் நோய்க்கடத்தி நிகழ்வுகளை நிறுத்தி வைத்தல் ஆகியவை காலத்தால் பரிசோதிக்கப்பட்ட பொதுச் சுகாதார நடவடிக்கைகள். கரோனாவை பற்றிய அச்சம் ஏதுமின்றி 2022-ஆம் ஆண்டை நாம் தொடங்க வேண்டும் என்றால் இந்த நடவடிக்கைகளை இந்தியர்கள் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிடத்தக்க பொதுச் சுகாதார வல்லுநர் ஒருவர் கூறியிருக்கிறார்.
ஈடிவி பாரத்திற்குக் கொடுத்த ஒரு சிறப்பு நேர்காணலில் குறிப்பிடத்தக்க பொதுச் சுகாதார நிபுணர், மற்றும் பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேசன் ஆஃப் இந்தியாவின் தலைவரும் ஆன மருத்துவர் கே சிரிநாத் ரெட்டி சொன்னது இதுதான்: கரோனா இரண்டாவது அலைக்கு எதிரான போரில் நமது தேசம் வெற்றி பெற வேண்டுமென்றால், காலங்காலமாய் நடைமுறையில் இருக்கும் பொதுச் சுகாதார நடவடிக்கைகளை நாம் பின்பற்ற வேண்டும். அவைதான் கரோனா என்னும் தீநுண்மியின் இரட்டை உருமாற்றம் கொண்ட வடிவங்கள் உட்பட எந்தவொரு புதிய வகையறாவையும் பரவாமல் கட்டுப்படுத்தும் வன்மையும், ஆற்றலும் கொண்டவை.
”தடுப்பூசியை மட்டுமே சார்ந்திருக்காதீர்கள். தடுப்பூசி மட்டும் போட்டுக் கொண்டு, பெரும் நோய்க்கடத்தி நிகழ்வுகளில் முகக்கவசம் அணியாமல் கலந்து கொண்டு சதாச் சுற்றிக் கொண்டே இருந்தால், இன்னும் ஒரு வருடத்திற்குப் பிரச்சினையில் இருந்து உங்களால் வெளிவராமல் போய்விடக் கூடும்,” என்றார் மருத்துவர் ரெட்டி.
“நமது சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டான 2022-ஐ வைரஸ் அச்சமின்றி நாம் ஆரம்பிக்க வேண்டும். அது சாத்தியப்பட வேண்டுமென்றால், இந்த 2021-ல் நாம் கட்டுப்பாட்டோடு, அடக்கி வாசித்து வாழ்ந்தாக வேண்டும், பொதுச் சுகாதார நடவடிக்கைகளோடும், தடுப்புமருந்து போட்டுக் கொள்ளும் முனைப்போடும்,” என்று மருத்துவர் சிரிநாத் ரெட்டி மேலும் விளக்கினார்.
”தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். அதே சமயம், கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் நாம் பேணியாக வேண்டும். எத்தனைப் பேருக்குத் தடுப்புமருந்து கொடுக்கிறோம் என்பது மருந்து எந்த அளவில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்தது. குறிப்பாக 35 வயதுக்கு மேம்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்புமருந்து ஆகஸ்டு 15-ஆம் தேதிக்குள் கொடுக்கப்பட்டு விடும் என்று நான் நம்புகிறேன்,” என்றார் அவர்.
கரோனாவின் இரண்டாம் அலையை கொண்டு வந்தது எது?
சமீப வாரங்களில் தேசத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மருத்துவ உட்கட்டமைப்பைத் திணறடித்துக் கொண்டிருக்கும் கரோனா தீநுண்மியின் இரண்டாம் அலையைப் பற்றிப் பேசும்போது, வருட ஆரம்பத்தில் தொற்று எண்ணிக்கை குறைவாக இருந்த போது நாம் கரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் வென்று விட்டோம் என்று மிதப்பில் இருந்தது பெரும் தவறு என்று மருத்துவர் ரெட்டி கூறினார்.
“தினப்படியான மரண விகிதத்திலும், தொற்று எண்ணிக்கையிலும், பரிசோதனை பாஸிட்டிவ் விகிதத்திலும் வீழ்ச்சி ஏற்படத் தொடங்கியவுடன் இந்த வருட ஆரம்பத்தில், அதாவது ஜனவரியில் நாம் ரொம்பவே அலட்சியமாக இருக்கத் தொடங்கி விட்டோம். ஒருவழியாக உலகத்தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக நாம் தப்புக் கணக்குப் போட்டு விட்டோம்,” என்றார் அவர்.
எந்தவொரு ஆபத்தான வைரஸ் என்றாலும் அதை எதிர்த்துப் போராடும் ஆற்றல் இந்தியர்களின் மரபணுக்களில் இயல்பாகவே உண்டு என்று நம்பிக்கொண்டு, ஒட்டுமொத்தக் கூட்ட நோய்எதிர்ப்புச் சக்தியைப் பற்றிச் சிலர் பேசத் தொடங்கியவுடன் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்ற நம்பிக்கை ஊரெங்கும் சுற்றிவர ஆரம்பித்தது.
ஊரடங்கு முதல் அலையைக் கட்டுப்படுத்தியது
கரோனாவின் முதல் அலையின் போது, நீண்டகால ஊரடங்கு, பயணக் கட்டுப்பாடுகள் கொண்ட பலவிதமான தளர்வுகள் ஆகியவை உட்பட பல்வேறு நடவடிக்கைகள் தொற்று எண்ணிக்கைகளைப் பெருமளவில் குறைத்தன.
“தீபாவளியின் போதுகூட, பெரிய கூட்டங்கள் தெருக்களில் இல்லை. இந்தக் கட்டுப்பாட்டு ஒழுங்குணர்வு, எப்போது நாம் முந்திரிக் கொட்டைத்தனமாக வைரஸ்க்கு எதிராக வெற்றி பெற்று விட்டோம் என்று அறிவித்தோமோ, அப்போதே மறைந்துவிட்டது,” என்று மருத்துவர் சிரிநாத் ரெட்டி ஈடிவியிடம் தெரிவித்தார்.
”இனி நாம் பெரிய திருமண விழாக்கள் நடத்தலாம். பிறந்தநாள் விழாக்கள் நடத்தலாம்; சட்டசபை, உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தலாம் என்றெல்லாம் மக்கள் நினைக்க ஆரம்பித்தார்கள். உள்நாட்டு, வெளிநாட்டு பயணங்கள் அடிக்கடி நிகழ்ந்தன. அவற்றின் ஒட்டுமொத்த விளைவாகத்தான் புதிய வைரஸ் வகையறாக்கள் பறந்து நம்மிடம் வந்து சேர்ந்தன,” என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
புதிய வைரஸ் வடிவத்தை வெளிப்படுத்துவதில் இங்கிலாந்து செய்த தாமதம்
புதிய வைரஸ் வடிவத்தை உலகத்திற்கு வெளிப்படுத்துவதை பலமாதங்களாக இங்கிலாந்து அரசு தள்ளி வைத்தது என்று மருத்துவர் ரெட்டி இங்கிலாந்திற்கு எதிராகக் குற்றஞ்சாட்டினார்.
“வைரஸின் இங்கிலாந்து வகையறா அவர்களுக்கு செப்டம்பரிலே தெரிந்துவிட்டது. ஆனால் அதை அவர்கள் டிசம்பர் மாதத்தில்தான் தெரிவித்தார்கள். அதற்குப் பின்புதான் நாம் மரபணு வரிசைப்படுத்தலுக்கான இந்தியா கூட்டமைப்பை உருவாக்கி அதைத் தேட ஆரம்பித்தோம். அது கணிசமான எண்ணிக்கையில் காணப்பட்டது. அதனால் நாம் அரசின் பயணக் கொள்கையை மட்டுமே குறை சொல்வது சரியாக இருக்காது,” என்றார் அவர்.
படுவேகமான கரோனா தொற்று
தொற்று விகிதத்தில் கரோனாவின் இங்கிலாந்து வகையறா 60 சதவீதம் அதிவேகமானது. ஏனென்றால் அதில் ஸ்பைக் புரோட்டீன் உருமாற்றங்கள் உள்ளன.
“இந்தப் புரோட்டீன்கள் என்னும் கருவிகள் மூலமாகத்தான் ஒரு வைரஸ் மனித உடல் செல்லுக்குக் கதவைத் திறந்து உள்நுழைகிறது. அங்கே எஸ்2 என்றழைக்கப்படும் ரிசப்டார் இருக்கிறது. ஸ்பைக் புரோட்டீன் தன்னை அந்த ரிசப்டாரோடு இணைத்துக் கொள்கிறது. பின்பு அது கதவைப் போன்று ரிசப்டாரைத் திருகிக் கதவைத் திறந்து செல்லுக்குள் செல்கிறது. செல்லுக்குள் நுழைந்த ஸ்பைக் புரோட்டீன் செல்லின் மரபணுக் கட்டமைப்பை தன்பிடிக்குள் கொண்டுவந்து மேலும் மேலும் தான்பெருகி தனது சொந்த வடிவங்களை உண்டாக்கிக் கொள்கிறது,” என்று மருத்துவர் சிரிநாத் ரெட்டி விஞ்ஞானப் பூர்வமாக விளக்கினார்.
“இந்தக் குறிப்பிட்ட உருமாறியும், மற்ற உருமாறிகளும் புதிய ஸ்பைக் புரோட்டீன் உருமாற்றங்களைப் பயன்படுத்தி ரிசப்டாரைக் கட்டிவைத்திருக்கும் தளங்களில் ஒட்டிக் கொள்கின்றன. அதனால் அவற்றை எளிதாக அகற்றிவிட முடியாது. அல்லது அவை மனித உடல் செல்லை எளிதாகத் திறந்து நுழைந்து விடமுடியும். இந்தக் குணாதிசயத்தினால்தான் அவற்றின் தொற்று விகிதம் அதிகமாகிறதே ஒழிய அவை வேகமாகப் பயணிப்பதால் அல்ல,” என்று மேலும் அவர் விளக்கம் கொடுத்தார்.
சரியான சாம்பிள் இன்மை
சரியான சாம்பிள்கள் எடுப்பது பற்றிப் பேசும்போது, நல்ல பரிசோதனைக்கூடச் சூழலில் செய்யப்படும்போது ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கூட 60-70 சதவீத பாஸிட்டிவ் விகிதத்தை மட்டுமே காட்டுகிறது, துல்லியம் என்ற கோணத்தில் பார்க்கும்போது.
“எச்சில், சளி துணிச் சேகரிப்பு மிகவும் முக்கியமானது. ஒரு பரிசோதனையில் நாம் பார்ப்பது என்னவென்றால் வைரஸ் என்பது பரிசோதனைக் கூடத்தில் எப்படி பெருகுகிறது என்பதைத்தான். எச்சில், சளி துணி சாம்பிள் சரியாகக் கொண்டு சேர்க்கப்படவில்லை என்றால் அல்லது பரிசோதனைக் கூடத்தில் அது சரியாகப் பாதுகாக்கப் படவில்லை என்றால், நிறைய தவறுகள் ஏற்பட்டு விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் பொய்யான நெகட்டிவ் ரிசல்ட் கூட வரலாம். அதனால்தான் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை ஒரு வருடத்தில் இரண்டு அல்லது மூன்று தடவை செய்ய வேண்டும்,” என்று அவர் மேலும் விளக்கினார்.