டெல்லி: தற்போது நடைபெற்று வரும் கோவிட் -19 நிலைமை இந்த நாட்டிற்கு நீண்டகால வளர்ச்சியைத் தக்கவைக்க தேவையான சீர்திருத்தங்களுக்கான நடவடிக்கைகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசைத் தடுக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை (பிப்.13) மக்களவையில் தெரிவித்தார்.
கோவிட் பரவல்
மக்களவையில் மத்திய பட்ஜெட் குறித்த கலந்துரையாடலுக்கு பதிலளித்த சீதாராமன், “இந்த சீர்திருத்தங்கள் வரவிருக்கும் தசாப்தத்தில் (10 ஆண்டு வளர்ச்சி) உலகின் சிறந்த பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழுவதற்கான பாதையை அமைக்கும்” என்று கூறினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சியை தூண்டும் காரணிகளை நான் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். நாட்டின் நீண்டகால வளர்ச்சியைத் தக்கவைக்கும் சீர்திருத்த முடிவுகளை எடுப்பதில் இருந்து தொற்றுநோய் நம்மைத் தடுக்கவில்லை. கோவிட் பெருந்தொற்று நடவடிக்கைகளில் நாம் முன்மாதிரியாக திகழ்கிறோம்.
அனுபவ பட்ஜெட்
இந்தத் தொற்றை எதிர்கொள்ள நாம் முன்னெச்சரிக்கையாக பின்வாங்கினோம். இதனால், இறப்பு விகிதங்கள் உலகிலேயே மிகக் குறைவு, தற்போது பாதிப்பாளர்கள் எண்ணிக்கையும் குறைந்துவிட்டன.
இந்த பட்ஜெட் முதலமைச்சராக இருந்து பிரதமரானவரின் அனுபவத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. குஜராத்தில் 1991க்குப் பிறகு பல மறுமலர்ச்சிகள் நிகழ்ந்தன. அந்த வகையில் அர்ப்பணிப்பு, சீர்திருத்தம் இந்த பட்ஜெட்டில் உள்ளது” என்றார்.
மாநிலங்களவை பேச்சு
சீதாராமன், வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் மத்திய பட்ஜெட் தொடர்பான கலந்துரையாடலுக்கு பதிலளித்தபோது, அரசாங்கம் அவர்களின் கூட்டாளிகளுக்கு மட்டுமே வேலை செய்கிறது என்று தவறான குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பிவருகின்றனர். இந்த அரசாங்கம் ஏழைகளுக்கானது” என்றார்.
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் குறித்து நிர்மலா சீதாராமன் அப்போது, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், காப்பீடு திட்டம் உள்ளிட்டவற்றை சுட்டிக் காட்டினார். மேலும், “காங்கிரஸ் ஆட்சியின் போது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி யாருக்கு சென்றது என்பது குறித்து தெரியவில்லை. பாஜக அரசாங்கம் ஆதார் உள்ளிட்ட திட்டங்களை கொண்டுவந்து அத்திட்டத்தின் பயனை உரியவர்களுக்கு கொடுத்துள்ளோம்” என்றும் கூறினார்.
இதையும் படிங்க : பட்ஜெட் விவாதம்; மக்களவையில் நிர்மலா சீதாராமன் பதில்!