ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், இரண்டு மாவட்டங்களுக்கு வாணிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் விளைவாக போஷானா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், கடந்த சனிக்கிழமை இரு இராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். சூரன்கோட் பகுதியில் உள்ள போஷானா என்ற இடத்தில் டோக்ரா எல்லையைக் கடந்தபோது, இரு வீரர்களும் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க:ஹீராநந்தனி கட்டுமான நிறுவனத்திற்கு எதிரான வழக்கு; குடியிருப்போர் சங்கத்திற்கு அபராதம் விதித்து தீர்ப்பு!
வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர்களை கண்டுபிடிக்கும் பணியில் ராணுவம், காவல்துறை மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று (09.07.2023) ஜூனியர் கமிஷன்ட் ஆபீசர் (JCO) உட்பட இரண்டு ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நைப் சுபேதார் குல்தீப் சிங்கின் உடல் சனிக்கிழமை இரவு ஓடையில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், லான்ஸ் நாயக் தெலு ராமின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
லான்ஸ் நாயக் தெலு ராம் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவரைக் காப்பற்ற ரோந்து படைத் தலைவரான நைப் சுபேதார் குல்தீப் சிங் முயற்சி மேற்கொண்ட போது அவரும் தனது உயிரை விட்டார் என்று ஒயிட் நைட் கார்ப்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
நைப் சுபேதார் குல்தீப் சிங் தரன் தரனில் உள்ள சபால் கலனில் வசிப்பவர் என்றும், லான்ஸ் நாயக் ராம் ஹோஷியார்பூரின் குராலி கிராமத்தில் வசிப்பவர் என்றும் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கூறினார். மேலும், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு, இறந்தவர்களின் உடல்கள் பஞ்சாபில் உள்ள அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க:"அரசியல் தலைவர்களுக்கு கல்வியறிவு இல்லை" : கிளம்பிய எதிர்ப்புக்கு நடிகை கஜோல் விளக்கம்!