அசாமில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பெக்கி, பக்லாடியா, புத்திமாரி, கபிலி மற்றும் பிரம்மபுத்திரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது.
அசாமில் மொத்தமுள்ள 35 மாவட்டங்களில் 32 மாவட்டங்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளானது. வெள்ளத்தால் நேற்று (ஜூன் 20) 11 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 73 ஆக உயர்ந்தது.
அசாமில் மோசம் அடையும் வெள்ளப்பெருக்கு வெள்ளத்தால் இதுவரை சுமார் 47 லட்சத்து 72 ஆயிரத்து 140 பேரும், 5 ஆயிரத்து 424 கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, இந்திய ராணுவம், தீயணைப்பு மற்றும் மீட்புப் படை ஆகியவை வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
மேலும், வெள்ளம் பாதித்த இடங்களில் 1,425 முகாம்கள் அமைக்கப்பட்டு 2 லட்சத்து 31 ஆயிரத்து 819 பேர் அதில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 1.13 கோடி ஹெக்டர் விவசாய நிலம் வெள்ளப்பெருக்கால் சேதமாகியுள்ளது. மேலும், 33 லட்சத்து 84 ஆயிரத்து 326 மிருகங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 ஆயிரத்து 232 மிருகங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன.
வெள்ள நிவாரண பணிகளையும், மீட்புப் பணிகளையும் அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முடுக்கிவிட்டுள்ளார். மேலும், படகுகள் மூலம் நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும், படகுகள் செல்ல முடியாத பகுதிகளில் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:நடுவானில் சிக்கிய கேபிள் கார்... 15 பேர் சுற்றுலா பயணிகளை மீட்கும் பணி தீவிரம்...