காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தியின் தொகுதிக்குள்பட்ட நிலம்பூர் பகுதியில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த வெள்ள நிவாரண உதவிப் பொருள்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நிலம்பூர் கடை வீதியில் காலியாக இருந்த கடை ஒன்றை வாடகைக்கு எடுக்கச் சிலர் வந்தபோது உணவுப் பொட்டலங்கள், உடைகள் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள் அங்கே பதுக்கிவைக்கப்பட்டிருந்தது உறுதிசெய்யப்பட்டது.
பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரண உதவிப் பொருள்களை வழங்காமல் திட்டமிட்டு பதுக்கிவைத்து அரசியல் நாடகமாடிவருவதாகக் கூறி கேரளாவை ஆளும் சிபிஐ (எம்) கட்சியின் இளைஞர் பிரிவான டி.ஒய்.எஃப்.ஐ அமைப்பு, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
இது தொடர்பாக நிலம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. அன்வர் கூறுகையில், “வெள்ள நிவாரண உதவிப் பொருள்கள் பதுக்கிவைத்த சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கே. கோபாலகிருஷ்ணனிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதுக்கல் சம்பவம் நிலம்பூரில் மட்டும் நடக்கவில்லை, மாநிலம் முழுதுவம் இதுபோல பதுக்கல் சம்பவங்களை காங்கிரஸ் கட்சியினர் அறங்கேற்றியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தை விசாரிக்க வேண்டும். இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட பொருள்களை பதுக்கிவைத்திருந்த இழிசெயல் தொடர்பாக கேபிசிசி தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பதிலளிக்க வேண்டும்.
ராகுல் காந்தியின் தொகுதியில் வெள்ள நிவாரண உதவிப்பொருள்களை பதுக்கிவைத்திருந்த காங்கிரஸ் கட்சியினர்! இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தபின், வயநாட்டின் பிற பகுதிகளில் இதேபோல பதுக்கிவைக்கப்பட்டிருந்த பொருள்களை அழித்துள்ளனர். வரவிருக்கும் உள்ளாட்சி அமைப்புத் தேர்தலை மனத்தில் வைத்து அற்பத்தனமான வேலையைச் செய்த காங்கிரஸ் கட்சியினர் மக்களிடம் மன்னிப்புக் கேட்டு வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க :பொய்யுரைகளைப் பரப்புவது பாகிஸ்தானுக்குப் புதிதல்ல - இந்தியா சரமாரி குற்றச்சாட்டு