பெங்களூரு:கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா ஜெயில் ரோட்டில் சுமார் 10 வருடங்களாக பராமரிப்பின்றி பாழடைந்து கிடந்த வீட்டில், 5 பேரின் எலும்புக்கூடுகள் மர்மமான முறையில் இன்று (டிச.29) கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த டி.எஸ்.பி அனில்குமார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில், தற்போது எலும்புக்கூடுகள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட வீட்டில், சித்ரதுர்கா தாலுகா தொட்டவவனஹள்ளியைச் சேர்ந்த ஜெகன்நாத் ரெட்டி(80) என்பவர் வசித்து வந்தது தெரியவந்துள்ளது. இந்த ஜெகன்நாத் ரெட்டி என்பவர் தும்கூர் பொதுப்பணித்துறையில் செயற்பொறியாளராக (Executive Engineer) பணியாற்றி வந்தார். இவர் தனது ஓய்வுக்குப் பிறகு சித்ரதுர்காவில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஜெகன்நாத் ரெட்டியின் உறவினரான பவன் குமார் என்பவர் ஜெயில் ரோட்டில் எலும்புக்கூடுகள் கண்டதாக மாநகர காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்துள்ளார். அதில், “அந்த வீட்டில் ஜெகன்நாத் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினரான அவரின் மனைவி பிரேமக்கா, மகள் திரிவேணி, மகன்கள் கிருஷ்ணா ரெட்டி மற்றும் நரேந்திர ரெட்டி ஆகியோர் வசித்து வந்தனர்.
சில வருடங்களாகவே எனது குடும்பமும், ஜெகன்நாத் ரெட்டி குடும்பமும் தொடர்பில் இல்லை. இருவரும் ஒருவர் வீட்டிற்கு ஒருவர் செல்லவில்லை. சில தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி இருந்தோம். எனவே, நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து பல வருடங்கள் ஆகின்றன. மேலும், அவரின் வீட்டில் 5 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவை ஜெகன்நாத் குடும்பமாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழுகிறது.
அந்த எலும்புக்கூடுகள் அவர்களுடையதாக இருக்க வாய்ப்புள்ளது. அவர்கள் அங்கு இறந்திருக்கலாம் என சந்தேகப்படுகிறேன்” என புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து தற்போது நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 5 பேரின் எலும்புக்கூடுகளை போலீசார் மீட்டுள்ள நிலையில், இந்த எலும்புக்கூடுகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் அடையாளம் மற்றும் இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான அடுத்தக்கட்ட தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாழடைந்த வீட்டில் 5 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தொழில் செய்வதாகக் கூறி ரூ.1 கோடி மோசடி - திருப்பத்தூர் தம்பதி கைது!