ஷிலாங்(மேகாலயா):மேகாலாயா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழையால் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 4 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். வெள்ளப்பெருக்கால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று(ஜூன் 16) லலித்ராம் கிராமத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி பலர் காயமடைந்தனர். மருத்துவமனையில் சிலர் சிகிச்சையில் உள்ளனர்.
மேற்கு காசியின் காவல் ஆணையர் இஸ்வாந்தா லாலு கூறுகையில், நிலச்சரிவின் போது சம்பவ இடத்திலேயே மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர். மற்றொரு குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச்செல்லும் வழியில் இறந்து விட்டதாக கூறினார்.
மற்றொரு சம்பவத்தில், தென்மேற்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள ஜாஷியார் கிராமத்தைச் சேர்ந்த ஹீல் சென்டிமெரி மிர்தாங் என்ற பெண், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தார். இந்த விபத்தில் காயமடைந்த இரண்டு மைனர் குழந்தைகள் மற்றொரு அறையில் இருந்ததால் தப்பினர். சம்பவத்தின் போது இறந்த பெண் அருகில் உள்ள அறையில் விளையாடிக் கொண்டிருந்த தனது இரண்டு குழந்தைகளுக்கு உணவு சமைத்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
மேகாலயா முதல்வர் கான்ராட் கே. சங்மா, பல்வேறு மாவட்டங்களின் துணை ஆணையர்களுடன் இது குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார், மேலும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைக் கவனிக்க அமைச்சர் தலைமையில் நான்கு பிராந்தியக் குழுக்களை அமைக்க உத்தரவிட்டுள்ளார். இதனிடையே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலை 6ல் உள்ள சோனாபூர் மற்றும் லும்சுலம்களுக்கு இடையேயான சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க:அக்னிபாத் போராட்டம்: தெலங்கானாவில் ஒருவர் உயிரிழப்பு