பெங்களூரு(கர்நாடகா):கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் வெவ்வேறு இடங்களில் இந்த உயிரிழப்பு நடந்துள்ளது. ராமாநகரா மாவட்டத்தில் உள்ள மகதி தாலுகா அருகில் அமைந்துள்ள குடலுரு கிராஸ் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் பிரவீன் என்ற 3 வயது ஆண் குழந்தையும், 4 வயது ஆண் குழந்தையும் விடாமல் பெய்த மழையில் மாட்டுக்கொட்டகை இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தக் குழந்தைகளின் தாயார் பிட்டு மற்றும் மோனிஷா ஆகியோர் பலத்த காயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர். இவர்கள் இருவரும் நேபாள நாட்டைச்சேர்ந்தவர்கள். மகதி தாலுகா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து விஜயாபுரா தாலுகாவில் 65 வயதாகும் நந்தப்பா என்ற முதியவர் அவர் வளர்க்கும் கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச்செல்வதை தடுப்பதற்காக காப்பாற்ற முயன்றபோது உயிரிழந்தார்.
ஹாசன் மாவட்டம், சன்னராயப்பட்டணாவில் உள்ள கல்லேசோமனஹள்ளியில் நடந்த மற்றுமொரு விபத்தில் ரங்கஷெட்டி (40) என்பவர் மீது, பாரிய மரம் விழுந்து உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட நபர் அவரது பைக்கில் சென்று கொண்டிருந்த போது இந்தச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
தும்குரு மாவட்டம், பாவகடா தாலுகாவில் உள்ள பயதானூர் அருகே 38 வயது பெண்ணான தேவிரம்மா நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து SDRF(மாநில பேரிடர் மீட்புக் குழு) குழுவினர் மாலையில் தேவிரம்மாவின் உடலை மீட்டனர். கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பல ஆறுகள் நிரம்பி வழிகின்றன.