புதுச்சேரி:காலாப்பட்டு மற்றும் பிள்ளைச்சாவடி மீனவ கிராமங்களில் கடல் அரிப்பைத் தடுக்க கல் கொட்டப்படுகிறது. இந்த இரு மீனவ கிராமங்களுக்கு இடையில் தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு பிள்ளைச்சாவடி என்ற கிராமமும் பாதிக்கப்படுகிறது. இந்த கிராமத்துக்குள் கடல் நீர் உள் புகுந்து வருகிறது.
இங்கும் கல் கொட்ட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திற்கு மீனவர் சார்பில் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்பகுதியில் கடல் சீற்றம், கனமழை போன்ற காரணத்தினால் 30க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்நிலையில் நேற்றும் கடல் சீற்றம் காரணமாக அந்த பகுதியில் மூன்று வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
இந்நிலையில், இவற்றைத் தடுக்க கல் கொட்ட மீனவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாததைக் கண்டித்து இன்று பிள்ளைச்சாவடி மீனவர்கள் கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் தங்களது ஆதார் அட்டைகளை வீசி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அரை மணி நேரமாக நீடித்த இந்த மறியல் காரணமாக அருகில் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் மாணவர்களும் பொதுமக்களும் தங்களது இடங்களுக்கு நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனிடையே கோட்டக்குப்பம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் கிழக்கு கடற்கரைச் சாலையில் அரை மணி நேரத்திற்குப் பிறகு போக்குவரத்து சீரானது.
இதையும் படிங்க:நடுக்கடலில் படகு விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மீனவர்கள்