டெல்லி:நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளில் தவிர்க்கப்பட வேண்டிய சொற்கள் குறித்த கையேடு ஒன்றை உச்சநீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 16) வெளியிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த கையேட்டை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வெளியிட்டார். இந்த கையேட்டில், பொதுப்புத்தியில் பெண்களுக்கு எதிராக பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் சொற்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த சொற்களை நீதிபதிகள் தங்களது உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகளில் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற சொற்களுக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய சொற்களும் இதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. நீதிபதிகள் மட்டுமல்லாமல், வழக்கறிஞர்களும் இந்த கையேட்டைப் பின்பற்ற வேண்டும் என்றும், மனுக்கள் மற்றும் வாதங்களில் குறிப்பிட்ட சொற்களை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், "பல நீதிமன்ற தீர்ப்புகளில் பெண்களுக்கு எதிராகவும், பெண்களைப் புண்படுத்தும் வகையிலும் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பொதுப்புத்தியில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் இந்த சொற்கள் முறையற்றவை. இதுபோன்ற சொற்களை நீதிபதிகள் தவிர்க்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகளில் பயன்படுத்தப்பட்ட அந்த பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலான சொற்கள் இந்த கையேட்டில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த சொற்கள் தொடர்பாக நீதிபதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இது உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.
இந்த சொற்கள் கடந்த காலங்களில் நீதிமன்ற தீர்ப்புகளில் பயன்படுத்தப்பட்டவை. அந்த தீர்ப்புகளை விமர்சிப்பதோ அல்லது அந்த தீர்ப்புகள் குறித்து கேள்வி எழுப்புவதோ இந்த கையேட்டின் நோக்கம் அல்ல. மாறாக பெண்களுக்கு எதிரான சொற்கள் கவனக்குறைவாக கையாளப்பட்டுள்ளன என்பதை அடிக்கோடிட்டு காட்டுவதே நோக்கம்" என்றார்.