டெல்லி:2024ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில், பாரதிய ஜனதா கட்சி, அகில இந்திய காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ்வாதி, ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக, ஆயத்தமாகி வருகின்றன.
இந்த நிலையில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் எதிர்கடசிகள் ஒருங்கிணைந்து அமைத்து உள்ள INDIA கூட்டணியும், இந்த தேர்தலில் நேருக்கு நேர் களம் காண முனைந்து உள்ளன. மத்தியில் ஆட்சியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பாரதிய ஜனதா கட்சி அகற்ற திட்டம் வகுத்து உள்ள INDIA கூட்டணி, நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 400 தொகுதிகள் வரையில், பாஜகவை எதிர்த்து போட்டியிட திட்டமிட்டு உள்ளது.
எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கிய கூட்டணியின் முதல் கூட்டம், பிகார் தலைநகர் பாட்னாவில், அம்மாநில முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதீஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டணியின் இரண்டாவது கூட்டம், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்கஜூன கார்கே, தலைமையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தான், இந்த கூட்டணிக்கு, Indian National Developmental Inclusive Alliance (INDIA) என்று பெயர் சூட்டியது. INDIA கூட்டணியின் மூன்றாவது கூட்டம், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதியும் நடைபெற்றது.
இந்த நிலையில், இந்த கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், தலைநகர் டெல்லியில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் இல்லத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்புக்குழுவில் சரத் பவார், காங்கிரஸ் கட்சியின் கே.சி. வேணுகோபால், ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி யாதவ், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட 14 பேர் இடம்பெற்று உள்ளனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற விவகாரத்தை, மத்திய அரசு எழுப்பி உள்ள நிலையில், நாட்டில் எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும், அதை சந்திக்க, INDIA கூட்டணி தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், டெல்லியில் இன்று ( செப்டம்பர் 13ஆம் தேதி) நடைபெற உள்ள முதல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில், யார் யாருக்கு எத்தனை இடங்கள் ஒதுக்குவது என்ற விவகாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: ஜி20 நாடுகளின் 18வது உச்சி மாநாடு - இந்தியா சாதித்தது என்ன?