உத்தரகாசி:உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் பிரம்மகால் - யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா மற்றும் தண்டல்கான் இடையே சுரங்கம் அமைக்கும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கடந்த நவம்பர் 12ஆம் தேதி காலை சுமார் 9 மணியளவில் தீடீரென சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களையும் மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சுரங்கத்தின் உள்ளே சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் சுவாசிப்பதற்காக குழாய் மூலம் ஆக்சிஜன் மற்றும் அவர்களுக்குத் தேவையான தண்ணீர், உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இன்றுடன் உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்து நடந்து 9 நாட்கள் ஆகிவிட்டது. மேலும், நேற்று (நவ.20) சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்பதற்காக, சுமார் 6 இன்ச் அகலம் உள்ள பைப்லைன் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மீட்புப்பணி பொறுப்பாளர் கர்னல் தீபக் பாட்டீல் கூறுகையில், “சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை தற்போது பொருத்தியுள்ள 900 மி.மீ பைப் மூலம் மீட்பது என்பது முக்கிய சவால் என்றாலும், இந்த முயற்சி பின்னர் செய்யப்படும். ஆனால் தற்போது, 6 இன்ச் லைப்லைன் (Lifeline) மூலம் சுரங்கப்பாதைக்குள் உணவு, செல்போன் மற்றும் சார்ஜர்கள் அனுப்பப்படும். மேலும், சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்கள் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு என்னென்ன உணவுகள் அனுப்பலாம் என மருத்துவர்களின் உதவியுடன் உணவுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.