லக்னோ: மக்கள் பலர் திருமணம் செய்து கொள்வதற்காக கட்டாய மதமாற்றத்திற்கு உள்ளாவதாகக் கூறி உத்தரப் பிரதேச அரசின் அமைச்சரவை கடந்த 24ஆம் தேதி கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்திற்கு உத்தரப் பிரதேச ஆளுநர் பட்டேல் ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து, திருமணத்திற்காக கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தும் நபர்களுக்கு 15 ஆயிரம் அபராதத்துடன் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. லவ் ஜிகாத் விவகாரங்களில் தொடர்புடைய நபர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும்.
அதுமட்டுமின்றி, சிறுமிகள் மற்றும் பட்டியலின மக்களை கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தும் நபர்களுக்கு 25 ஆயிரம் அபராதத்துடன் மூன்று முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என உத்தரப் பிரதேச அமைச்சர் சித்தார்த் நாத் சிங் அறிவித்திருந்தார்.