காசியாபாத்:உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள ஹிண்டனில் நடைபெற்ற பாரத ட்ரோன் சக்தி 2023 கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். பின்னர் இந்திய விமானப் படையின் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல், விஆர் சௌதாரி உள்பட உயர் ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் சி-295 போக்குவரத்து விமானத்தை இந்திய விமானப்படையிடம் ஒப்படைத்தார். இதையடுத்து நடைபெற்ற 'சர்வ தர்ம பூஜை'யிலும் பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
ஸ்பெயினில் உள்ள ஏர்பஸ் நிறுவனம் இந்திய விமானப்படைக்காக சி-295 ரக விமானங்களைத் தயாரித்து அளிப்பதற்கு. இந்தியாவும், ஏர்பஸ் நிறுவனமும் 2021ஆம் ஆண்டு கையெழுத்திட்டன. இதைத் தொடர்ந்து ஸ்பெயினின் செவில் நகரிலுள்ள உற்பத்தி ஆலையில் விமானத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. சி-295 வகையைச் சேர்ந்த 56 விமானங்களை இந்திய விமானப்படைக்கு அளிக்குமாறு அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டிருந்தது.
அந்த ஒப்பந்தத்தின்படி 16 விமானங்கள் ஸ்பெயினிலும், 40 விமானங்கள் குஜராத்திலுள்ள வதோதராவில் உள்ள ஆலையிலும் உற்பத்தி செய்யப்படும். வதோதரா ஆலையானது, ஏர்பஸ் நிறுவனமும், டாடா நிறுவனமும் கூட்டு சேர்ந்து ஏற்படுத்தியதாகும். இந்த சி-295 ரக விமானமானது 5 முதல் 10 டன் எடையை சுமந்து செல்லும் திறன் படைத்தது. இந்நிலையில் ஸ்பெயினின் செவில் நகரில் உள்ள உற்பத்தி ஆலையில் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. பின் கடந்த மே மாதம் முதல் விமானம் வெற்றிகரமாக தாயார் செய்யப்பட்டு செ.21ஆம் தேதி சி-295 ரக விமானம் இந்தியா வந்தடைந்தது.